

அனுஷ்கா சர்மா நடித்து வெளிவந்துள்ள என்.ஹெச் 10 படம் பார்த்த இந்திய வீரர் விராட் கோலி, ட்விட்டரில் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா - இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாகவே செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதை உறுதிபடுத்தும் வகையில் விராட் கோலி ஆடும் ஆட்டங்களில் வந்து உற்சாகப்படுத்துவது, அவருடன் விழாக்களில் கலந்து கொள்வது என அனுஷ்கா சர்மாவும் செய்திகளுக்கு தீனி போட்டார்.
தற்போது அனுஷ்கா சர்மா நடிப்பில் மார்ச் 13 அன்று வெளியான என்.ஹெச் 10 படத்தை பார்த்துள்ள காதலர் விராட் கோலி, ட்விட்டரில் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். "இப்போது தான் என்.ஹெச் 10 படம் பார்த்தேன். ஆச்சரியமாக உள்ளது. அற்புதமான திரைப்படம். குறிப்பாக எனது (காதலி) அனுஷ்கா சர்மாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது" என தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த அனுஷ்கா சர்மா, நன்றி, மிக்க மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது இந்த ட்வீட்டை அவர் நீக்கியுள்ளார்.
இந்திய வீரர்கள் உலகக் கோப்பையில் விளையாட ஆஸ்திரேலியா - நியூசிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், விராட் கோலி திரைப்படம் பார்த்ததாக ட்வீட் செய்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் கோலி 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இதை வைத்து மீம் தயாரிப்பாளர்கள் உற்சாகமாக கலாய்த்து வருகின்றனர்.