"நகைச்சுவை என்பது ஒரு மெல்லிசான கோடு" : ஷாரூக் கான்

"நகைச்சுவை என்பது ஒரு மெல்லிசான கோடு" : ஷாரூக் கான்
Updated on
1 min read

ஏஐபி ரோஸ்ட் நிகழ்ச்சி தொடர்பாகப் பேசிய பாலிவுட் நடிகர் ஷாரூக் கான், தான் எந்த தரப்புக்கும் ஆதரவாக இல்லை என்றும், நகைச்சுவை எப்போதும் மக்களிடம் விதவிதமான எதிர்வினைகளை உண்டாக்கும் என்றும் கூறினார்.

ஏஐபி என்ற குழு நடத்திய 'ரோஸ்ட்' என்ற நிகழ்ச்சியும், தொடர்ந்து அந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவு யூடியூப்பில் பதிவேற்றிய பிறகு சந்தித்த விமர்சனங்களை பற்றியும் நடிகர் ஷாரூக் கானிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அவர் கூறியதாவது:

"நகைச்சுவையில் எனக்கு என்றுமே நம்பிக்கை இருக்கிறது. ஆனால் ஒரு திரைக் கலைஞனாக எனது வார்த்தைகளை நான் ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக எனது நகைச்சுவை உணர்வு கட்டுக்குள் உள்ளது. அதை நான் கட்டுப்படுத்தி வைக்கக் கற்றுக் கொண்டுள்ளேன் ஏனென்றால் நகைச்சுவை என்று வந்தால் நடுவில் ஒரு மெல்லிய கோடு இருக்கிறது. நகைச்சுவையைக் கண்டு நாம் சிரிப்பதானாலும் சரி, வெறுப்பதானாலும் சரி. அது எப்போதுமே தீவிரமான எதிர்வினைகளை உண்டாக்கும்.

என்னைப் போன்ற பிரபலங்களின் வார்த்தைகளை மக்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். எனவே, என்ன சொல்கிறோம் என்பதில் கவனம் தேவை. நான் இங்கு என்னைப் பற்றி மட்டும்தான் பேசுகிறேன். எப்போதுமே சர்ச்சைகளும், கேள்விகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நான் எந்தப் பக்கமும் சாயாமல் இருக்க வேண்டும்.

கருத்து சுதந்திரம் எப்போதுமே இருக்கிறது. அதே நேரத்தில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதும் முக்கியம். உங்களுக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால் அதைப் பார்க்காதீர்கள். வேறு வேலையைப் பாருங்கள் என்றே நான் கூறுவேன். நீங்கள் பார்க்க வேண்டும் என்று யாரும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை. அதே நேரத்தில் பிடிக்காததைப் பார்த்து விட்டீர்கள் என்றால் அந்த ஞாபகங்களோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

நான் பார்த்து பிடிக்காமல் போன படங்கள் பல உள்ளன. ஆனால் அதை தயாரித்தவர்களிடம் சென்று குற்றம்சாட்டுவதற்கு எனக்கு உரிமையில்லை. இன்றைய ஊடகங்களின் அழகே, நம் கையில் இருக்கும் தேர்வு செய்தலின் சக்தி தான். நாம் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டாம் என முடிவு செய்துகொள்ள முடியும்.

இவ்வளவு பேசினாலும், என்னைப் பொருத்தவரையில் சில கட்டுப்பாடுகளை பின்பற்றவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி செய்கிறார்கள், ஏன் செய்கிறார்கள் என்பது குறித்து விமர்சனம் செய்ய எனக்கு உரிமை இல்லை"

இவ்வாறு ஷாரூக் கான் பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in