

தனது திரையுலக வாழ்க்கையில் மிக கடினமான கதாபாத்திரம் 'ஷமிதாப்' என்று நடிகர் தனுஷ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
பால்கி இயக்கத்தில் தனுஷ், அமிதாப் பச்சன், அக்ஷ்ரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஷமிதாப்'. இளையராஜா இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிப்ரவரி 6-ம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
'ஷமிதாப்' படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து தனுஷ் கூறும்போது, "'ராஞ்ஹானா' படத்தைத் தொடர்ந்து இந்தியில் எனக்கு பல்வேறு கதைகள் வந்தது. சுமார் 8 மாதங்களாக நல்ல கதைக்காக காத்திருந்தேன்.
இயக்குநர் பால்கி அழைத்து 'ஷமிதாப்' கதையினை 2 மணி நேரத்தில் கூறியவுடன் நடிப்பது என்று முடிவெடுத்தேன். நான் இதுவரை நடித்துள்ள 28 படங்களில் மிகவும் கடினமான கதாபாத்திரம் 'ஷமிதாப்'. அப்பாத்திரத்தில் அவ்வளவு எளிதாக நடித்துவிட முடியாது. இயக்குநர் பால்கி மற்றும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
அமிதாப் போன்ற மிகச் சிறந்த மனிதரிடமிருந்து பலவற்றை கற்றுக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக நான் இதனை பார்க்கிறேன். அவரது குரலை பிரதிபலிப்பது மிகவும் சிரமமான ஒன்று. அதனை முழுமையாக அளிக்க வேண்டும் என்ற பதற்றம் மட்டும் என் மனதில் இருந்துகொண்டே இருந்தது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் எனது நடிப்பில் அவரது குரல் திரையில் வரப்போவது என்று நினைக்கும்போதெல்லாம் நான் நெகிழ்ச்சியடைந்தேன்" என்று தெரிவித்திருக்கிறார்.