

மேடை நிகழ்ச்சியின்போது இந்தி நடிகை கவுஹர் கான் அரைகுறை ஆடை அணிந்திருந்ததாக கூறி, அவரது கன்னத்தில் அறைந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மும்பையில் பிரபல இந்தி நடிகை கவ்ஹர் கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் நேற்று (ஞாயிற்றுகிழமை) கலந்துகொண்டார்.
அப்போது அங்கு படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் அங்கிருந்து வந்து மேடை ஏறி திடீரென கவ்ஹர் கானின் கன்னத்தில் அறைந்தார். இதனை அடுத்து படப்பிடிப்பில் இருந்த அனைவரும் நடிகையை அடித்த நபரை பிடித்து விசாரித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக நடிகை கவ்ஹர் கான் சம்பந்தப்பட்டவர் மீது அளித்த புகாரை தொடர்ந்து அத்துமீறி நடந்த நபரை போலீஸார் இன்று (திங்கட்கிழமை) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் அகில் மாலி அவரது வயது 24 என தெரியவந்துள்ளது.
விசாரணையில் நடிகை கவ்ஹர் கான் அரை குறை ஆடை அணிந்திருந்ததாகவும், அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது ஆதங்கத்தை மேடை ஏறி அவரது கன்னத்தில் அடித்து வெளிப்படுத்தியதாகவும் இளைஞர் அகில் மாலி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அகில் மாலி மும்பை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
நடிகை கவ்ஹர் கான் மீதான தாக்குதலுக்கு நடிகர் ஃபர்ஹான் அக்தர் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.