மீண்டும் சர்ச்சையில் அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் வங்கா

மீண்டும் சர்ச்சையில் அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் வங்கா
Updated on
1 min read

'கபிர் சிங்' படத்தின் வெற்றிக்குப் பின் அளித்த பேட்டியில், தன்னுடைய பதில்களால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் இயக்குநர் சந்தீப் வங்கா.

தெலுங்கில் பெரும் வரவேற்பு பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம், இந்தியில் 'கபிர் சிங்' என்ற பெயரில்  ரீமேக் செய்யப்பட்டது. ஷாகித் கபூர், கியாரா அத்வானி, அர்ஜான் பாஜ்வா, நிகிதா தத்தா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை, 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கினார்.

ஜூன் 21-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதுவரை இந்தப் படத்தின் வசூல் 230 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. மேலும், இந்தப் படத்தில் நாயகன் பேசும் வசனங்கள், பெண்கள் காட்டப்பட்ட விதம் குறித்து பெண்ணியவாதிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால், படமோ பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் வெற்றி குறித்து இயக்குநர் சந்தீப் வங்கா, யூ ட்யூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், தன் மீதான விமர்சனங்கள் குறித்த அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்து, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அப்பேட்டியில், “ஒரு பெண்ணுடன் ஆழமான பிணைப்பில் இருக்கும்போது (அதேபோல ஒரு ஆணுடன் ஒரு பெண் ஆழமான பிணைப்பில் இருக்கும்போது), அதில் நிறைய நேர்மை இருக்கும். அதை உடல் ரீதியாகக் காட்டும், ஒருவரை ஒருவர் அறைந்து கொள்ளும் சுதந்திரம் இல்லையென்றால், அதில் என்ன காதல் இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

'கபிர் சிங்’ படத்தை சாடும் இந்தப் பெண் விமர்சகர்கள், காதல் வயப்பட்டதே இல்லை என்று நான் நினைக்கிறேன். அவள் கபிர் சிங்கை காரணமின்றி அறைகிறாள். கபிர், காரணத்துடன் அறைகிறான். ஒரு பெண்ணை அறைய முடியாதென்றால், நீங்கள் நினைத்த இடத்தில் அவரைத் தொட முடியாதென்றால், அவரை முத்தமிட முடியாதென்றால், கெட்ட வார்த்தை பேச முடியாதென்றால், அந்த உறவில் எந்த உணர்ச்சியையும் நான் பார்க்கவில்லை.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களிடம் நான் நிறைய ஆலோசித்துள்ளேன். அவர்களின் கதைகள் எனக்குத் தெரியும். அதை என்னால் உணர முடியும். ரேப் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தும் விமர்சகர்களுக்கு, அப்படியென்றால் என்னவென்றே தெரியாது என நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சந்தீப் வங்கா.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சின்மயி, சமந்தா உள்ளிட்டவர்கள் இந்தப் பதிலுக்கு தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். ஆனால், 'அர்ஜுன் ரெட்டி', 'கபிர் சிங்' படங்களின் ரசிகர்களோ #WeSupportSandeepReddyVanga என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in