

ராமாயண இதிகாசம் மீண்டும் திரைப்படமாக உருவாகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில், 3டியில் தயாராகும் இந்தப் படம் மூன்று பாகங்களாக வெளியாகவுள்ளது.
இந்தியாவின் முக்கிய இதிகாச நூல்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்தைத் தழுவி நிறைய திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனிமேஷன் திரைப்படங்களும், மெகா சீரியல்களும் கூட உருவாகியுள்ளன.
’பாகுபலி’ காட்டிய பிரம்மாண்ட வெற்றி கடந்த சில வருடங்களாகவே பல்வேறு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களை அதே போன்ற வரலாற்று அல்லது இதிகாசப் பின்னணி கொண்ட பிரம்மாண்டப் படங்களை இயக்க ஊக்குவித்துள்ளது.
தற்போது அதன் நீட்சியாகவே இந்த ராமாயண திரைப்பட அறிவிப்பும் பார்க்கப்படுகிறது. மது மண்டேனா, அல்லு அரவிந்த், நமித் மல்ஹோத்ரா என மூன்று தயாரிப்பாளர்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளனர். இதன் பட்ஜெட் ரூ.500 கோடி என்று உத்தேசிக்கப்பட்டுளது. இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில், 3டியில், மூன்று பாகங்களாக இந்தக் கதை திரைப்படமாகிறது.
'தங்கல்' இயக்குநர் நிதேஷ் திவாரியும், 'மாம்' இயக்குநர் ரவி உத்யவாரும் இணைந்து இந்தப் படத்தை இயக்கவுள்ளனர். இதில் ரவி உத்யவார் ஒரு ஓவியரும் கூட. இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட திரையுலகங்களைச் சேர்ந்த நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர். அதற்கான தேர்வு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மூன்று வருடங்களாகவே இந்தப் படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 2021-ஆம் வருடம் முதல் பாகத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.