

தேசிய விருது பெற்ற நடிகை சாய்ரா வாஸிம் தான் சினிமாத் துறையிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஒமர் அப்துல்லா உள்ளிட்ட காஷ்மீர் அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். அவரது முடிவு அவருக்கு அதிஷ்டத்தை அளிக்கட்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் பிறந்துவளர்ந்த சாய்ரா வாஸிம் 2016ல் பாலிவுட்டில் நுழைந்தார். அமிர்கான் நாயகனாக நடித்த டங்கல் திரைப்படத்தின்மூலம் சிறந்த தேசிய உறுதுணை நடிகைக்கான விருதையும் பெற்றார். குறுகிய காலத்திலேயே சிற்சில படங்கள் மூலம் எண்ணற்ற விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்தவர் வாஸிம்.
ஆனால் சமீப காலமாக தான் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தனக்கு நிம்மதியில்லை எனவும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று சில மணி நேரங்களுக்கு முன்னதாக அவர் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், ''தனது நம்பிக்கையிலும் மதத்திலும் தலையீடுகள் ஏற்படுவதால் தனது வேலைமுறைகளில் தான் மகிழ்ச்சியாக இல்லை'' எனவும், "நான் இங்கே சரியாக பொருந்தினாலும், நான் இங்கு சார்ந்தவர் இல்லை'' என்றும் குறிப்பிட்டு அதனால் தான் சினிமாவிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.
நடிகை சாய்ரா வாஸிமின் இந்த அறிவிப்பை காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
"சாய்ரா வாஸிம்மின் தேர்வுகளைப் பற்றி நாம் யார் கேள்வி கேட்க? அவர் எதை விரும்புகிறாரோ அதன்படி செய்ய வேண்டியதுதான் அவருடைய வாழ்க்கை. நான் செய்வதெல்லாம் அவருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதைத்தான். மற்றும் அவர் எதைச் செய்தாலும் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று நான் நம்புகிறேன்"
இவ்வாறு ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஷா ஃபாயிசல் தனது ட்விட்டர் பதிவில்,
''ஒரு நடிகராக இந்த முடிவெடுத்துள்ள சாய்ரா வாஸிம்முக்கு நான் எப்போதும் மதிப்பளிக்கிறேன். ஒரு இளம் வயதில் வேறு எந்த காஷ்மீரியும் அத்தகைய ஒரு சிறப்பான அந்தஸ்தையும் வெற்றியையும் புகழையும் அடையவில்லை. இன்று, அவர் தனது சினிமாத்துறையிலிருந்து விலகியதால், அவரது இந்த முடிவை மதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. அவருடைய அதிர்ஷ்டத்தை விரும்புகிறேன்.'' என்று தெரிவித்துள்ளார்.