நட்சத்திர வாரிசுகளின் ஆதிக்கம் குறித்து அதிகம் பேசிவிட்டோம்: கங்கணா ரணாவத்

நட்சத்திர வாரிசுகளின் ஆதிக்கம் குறித்து அதிகம் பேசிவிட்டோம்: கங்கணா ரணாவத்
Updated on
1 min read

கரண் ஜோஹர் போல, நடிகை கங்கணா ரணாவத்தும், நட்சத்திர வாரிசுகள் ஆதிக்கம் குறித்து பேசுவது போதும் எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே இது பற்றி அதிகம் விவாதித்துவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். இயக்குநர் கரண் ஜோஹர் நடத்தும் காஃபி வித் கரண் தொலைக்காட்சியில் பங்கேற்ற கங்கணா, அதில் அவரை, நட்சத்திர வாரிசுகளின் ஆதிக்கத்துக்கு கொடி பிடிப்பவர் என நேரடியாக விமர்சித்தார். இது பெரிய சர்ச்சையை உருவாக்கியது.

புதன்கிழமை தனது சிம்ரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த கங்கணாவிடம் மீண்டும் இந்த சர்ச்சை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இது பற்றி நான் வெளிப்படையாக எழுதிவிட்டேன். அதிகம் விவாதித்துவிட்டோம். நான் இதுவரை சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை. அவ்வளவுதான்" என்றார்.

அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விருதுகள் விழாவில் கரண் ஜோஹர், சைஃப் அலி கான், வருண் தவான் ஆகியோர் கங்கணாவை சீண்டும் வண்ணம், மேடையிலேயே, நட்சத்திர வாரிசுகளின் ஆதிக்கத்துக்கு ஆதரவாக கோஷம் போட்டனர். அது சர்ச்சையானதைத் தொடர்ந்து மூவரும் மன்னிப்பும் கோரினர்.

பிறகு இது பற்றி ஒரு பேட்டியில் பேசியிருந்த கரண் ஜோஹர், "நான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறேன். நட்சத்திர வாரிசுகள் பற்றியோ, கங்கணாவைப் பற்றியோ நான் பேச மாட்டேன். ஏனென்றால் அது கங்கணாவுக்கு என் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும், நான் ஒழுங்கற்ற்று பேசுவதாக இருக்கும், ஏற்கெனவே அப்படி நடந்தும் விட்டது. நட்சத்திரங்களின் வாரிசுகளாக இருந்தால் எளிதாக வாய்ப்பு கிடைக்கும்தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் கிடைத்த வாய்ப்பை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் நம்மை செதுக்கும் " என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in