சினிமாவை நன்றாகப் புரிந்தவர் ஜோஷி: புதிய தணிக்கைத் துறை தலைவர் பற்றி ஷ்யாம் பெனகல் கருத்து

சினிமாவை நன்றாகப் புரிந்தவர் ஜோஷி: புதிய தணிக்கைத் துறை தலைவர் பற்றி ஷ்யாம் பெனகல் கருத்து
Updated on
1 min read

மத்திய தணிக்கைத் துறையின் புதிய தலைவராக ப்ரஸூன் ஜோஷி நியமிக்கப்பட்டிருப்பதால், துறையில் மாற்றங்கள் வந்து மேம்படும் என பிரபல இயக்குநர் ஷ்யாம் பெனகல் கருத்து தெரிவித்துள்ளார்.

திரைப்பட தணிக்கையில் கோரப்படும் வெட்டுகள் மற்றும் ஆட்சேபணைகள் பற்றி இயக்குநர்களிடமிருந்து தொடர்ந்து பல புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. எந்தெந்த வார்த்தைகளெல்லாம் தடை செய்யப்படும் என்று வந்த சுற்றறிக்கையும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து ஜனவரி 2016ல், தணிக்கைத் துறையின் செயல்பாடுகளை மறுசீரமைக்க ஷ்யாம் பெனகல் தலைமையிலான குழு ஒன்று மத்திய அரசால் நியமிக்கப்பட்டது. இதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, விளம்பரப் பட இயக்குநர் பியூஷ் பாண்டே, விமர்சகர் பாவன சோமையா உள்ளிட்டோரும் இருந்தனர். ஏப்ரம் 2016ல் சில இந்தக் குழு தணிக்கையில் வேண்டிய மாற்றங்கள் குறித்து சிலப் பரிந்துரைகளை அளித்தன.

மேலும், முன்னாள் தணிக்கைத் துறை தலைவராக செயல்பட்ட பஹ்லஜ் நிஹலானி சர்ச்சைக்குரிய சில கருத்துகளாலும், செயல்பாடுகளாலும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தார். தற்போது மத்திய திரைப்பட தணிக்கைத் துறையின் புதிய தலைவராக, பாடலாசிரியரும், விளம்பரப்பட இயக்குநருமான ப்ரஸூன் ஜோஷி பொறுப்பேற்றுள்ளார்.

இதுபற்றி பேசிய ஷ்யாம் பெனகல், "ப்ரஸூன் ஜோஷியே ஒரு கலைஞர்தான். உயர் மதிப்புள்ள பாடலாசிரியர். ஊடகங்களையும் அவருக்கு நன்றாகத் தெரியும். இந்தியாவின் சிறந்த விளம்பர நிறுவனத்துக்கு தலைவராக இருந்துள்ளார். ஊடகம், சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகை என அனைத்தையும் புரிந்து வைத்துள்ளார். அவரை விட இந்த பதவிக்கு சிறந்தவர் யார் இருப்பார் என என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை." என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in