

சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம் 3' திரைப்படம் இந்தியில் ரீமேக்காகவுள்ளது. ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் சன்னி தியோல் நடிக்கவுள்ளார்.
இந்திய திரையுலகில் பல்வேறு முன்னணி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் ரவி.கே.சந்திரன். தமிழில் இயக்குநராக அறிமுகமான 'யான்' படுதோல்வியை சந்தித்தது. தற்போது இந்தியிலும் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் ரவி.கே.சந்திரன்.
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 'சிங்கம் 3' படத்தை சமீபத்தில் பார்த்திருக்கிறார் சன்னி தியோல். அவருக்கு மிகவும் பிடித்துவிடவே, அதன் இந்தி ரீமேக்கில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். அப்படத்தின் மூலமாக இந்தியிலும் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் ரவி.கே.சந்திரன்.
தற்போது இந்தி திரையுலகிற்கு ஏற்றார் போல் 'சிங்கம் 3' கதைக்களத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார் ரவி.கே.சந்திரன். ஜெயந்திலால் காடா இதனை தயாரிக்கவுள்ளார். நாயகியாக யார் நடிக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை.