

நவாசுதின் சித்திக் நடிப்பில் உருவான 'பாபுமோஷய் பந்தோக்பாஸ்' படத்துக்கு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் 8 சிறிய வெட்டுகளுடன் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதை இயக்குநர் குஷான் நந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 'பாபுமோஷய் பந்தோக்பாஸ்' படத்தின் தணிக்கையில் பெரும் சர்ச்சை எழுந்தது. முன்னாள் தலைவர் பஹ்லஜ் நிஹ்லானி தலைமையிலான குழு கடந்த மாதம் இந்தப் படத்துக்கு 48 வெட்டுகளோடு ஏ சான்றிதழும் வழங்கியது. தொடர்ந்து சென்சார் முறையை சாடி படக்குழு ஊடகங்களில் பேட்டி தந்தது. தணிக்கையை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் கொண்டு செல்வதாகவும் அறிவித்தது.
தற்போது இந்தப் படம் சிறிய வெட்டுகளுடன் ஆகஸ்ட் 25 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் குஷான் நந்தி, "படத்தில் 8 சிறிய மற்றும் நாங்களாக முன்வந்து ஏற்ற வெட்டுகளுக்கு தீர்ப்பாயம் ஒப்புக்கொண்டுள்ளது. 'பஹ்லஜ் நிஹ்லானி' படத்தை முடக்க நினைத்து கடிதம் எழுதியதைத் தாண்டி இது நடந்துள்ளது. அனைவரையும் ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று சந்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் நாயகன் நவாசுதினும் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிறிய வெட்டுகளுடன் படத்துக்கு தணிக்கை தந்த தீர்ப்பாயத்துக்கு நன்றி. படம், அதன் அசல் தன்மையுடன் ஆகஸ்ட் 25 அன்று வெளியாகும்" என கூறியுள்ளார்.