

தேசிய விருது பெற்ற நடிகர் அக்ஷய்குமார், கழிவறைகள் இல்லாத பிரச்சினை கிராமங்கள் சார்ந்தது மட்டுமல்ல, நகரங்களிலும் அந்த பிரச்சினை இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
அக்ஷய்குமார் நடிப்பில் ‘டாய்லட் ஏக் ப்ரேம் கதா’ என்ற படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது. சுகாதாரம், தூய்மையான இந்தியா ஆகிய கருத்துகளை ஒட்டி இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது.
இது பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை ஒத்திருப்பதும் பட ட்ரெய்லரில் தெரிந்தது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
தொடர்ந்து பிரதமர் மோடியின் திட்டங்களை ஒட்டி படங்கள் நடிப்பீர்களா என நடிகர் அக்ஷய் குமாரிடம் கேட்டபோது, "எனக்கு இந்த கதை பிடித்ததால் இந்த படத்தில் நடித்தேன். யாரும் கேட்டுக்கொண்டதால் அல்ல. நமது பிரதமர் பதவியேற்றதும் தூய்மை இந்தியா பற்றி பேசியது வேறு. இந்தப் படத்தின் கதை அவரது திட்டத்தைப் பேசுவது போல இருக்கும்.
ஆனால் பொதுவில் தூய்மை இந்தியா என்பது அவர் ஆரம்பித்த விவாதம் அல்ல. நாம் ஒவ்வொருவரும் சம்பந்தப்பட்டிருக்கும் விஷயம் அது. நமது சுற்றுப்புறத்தை நாம் தூய்மையாக வைத்தால் தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். இது வெறும் கிராமங்களில் மட்டும் இருக்கும் பிரச்சினை என்று நினைத்தால் அது தவறு. நகரங்களிலும் இந்தப் பிரச்சினை அதிகமாக உள்ளது" என்றார்.