Last Updated : 27 Jul, 2017 04:27 PM

 

Published : 27 Jul 2017 04:27 PM
Last Updated : 27 Jul 2017 04:27 PM

இந்து சர்க்கார் படத்தை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி

இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதை வைத்து எடுக்கப்பட்ட ‘இந்து சர்க்கார்’ திரைப்படத்தை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வ ராய், ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நீதிபதிகளின் வாதாடிய பண்டார்கர் தரப்பு, சிபிஎஃப்சி குழுவினர் ஏற்கெனவே பரிந்துரைத்த காட்சிகளை நீக்கி விட்டதாகக் கூறியிருந்தது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதை மையமாக வைத்து ‘இந்து சர்க்கார்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் மதூர் பண்டார்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்துக்கு காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சஞ்சய் காந்தியின் மகள் என தன்னைக் கூறிவரும் பிரியா சிங் பால் என்பவர், ‘இந்து சர்க்கார்’ திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 24-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பிரியா சிங் பால் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வ ராய், ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பிரியா சிங் பால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டபோது, “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் ‘இந்து சர்க்கார்’ திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும்” என்று கோரினார்.

இதுகுறித்து நீதிபதிகள் கூறியபோது, “இந்த வழக்கின் தன்மை குறித்து முதலில் ஆராயப்பட்டு, அதன்பின்னரே இது அவசர வழக்கா, சாதாரண வழக்கா என்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் படம் குறித்த தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்துத் தீர்ப்பளித்த நீதிபதிகள் அமர்வு, ''படத்தின் உள்ளடக்கத்தைப் பொருத்தவரை, படம் எந்த விதத்திலும் சட்ட விதிகளை மீறவில்லை என்பது தெளிவாகிறது. இதனால் திரைப்படத்தை வெளியிட அனுமதி அளிக்கிறோம்'' என்று கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ‘இந்து சர்க்கார்’ திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x