

ஷாரூக் கானின் நம்பகத்தனமான நடிப்பால் அவருடன் காதல் காட்சிகளில் நடிக்க எளிதாக இருந்ததாக நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.
'ஜப் ஹாரி மெட் சேஜல்' படத்தில் நடித்துள்ள அனுஷ்கா - ஷாரூக் ஜோடி, படத்தில் ஹவாயேன் என்ற பாடலை வெளியிட நிகழ்ச்சி ஒன்றுக்கு வருகை தந்திருந்தனர்.
அதில் பேசிய அனுஷகா சர்மா, "காதல் காட்சிகளில் நடிப்பது மிக எளிதாக இருந்தது. அவ்வளவு நம்பகத்தன்மையுடன் இருந்தார். இந்தப் பாடலைப் பார்த்தால் அவரது கண்ணிலேயே அது தெரியும். என்னைப் பொறுத்தவரையில் ஷாரூக்கால் இந்த மைக்குடன் கூட காதல் செய்ய முடியும். உலகில் அழகான பெண்ணைப் காதலுடன் பார்ப்பது போல அவரால் இந்த மைக்கையும் பார்க்க முடியும்." என்றார்.
இதற்கு நகைச்சுவையாக பதிலளித்த ஷாரூக்கான், "நீங்கள் கையில் வைத்திருந்தால் ரொமான்ஸ் செய்யலாம். இல்லையென்றால் முடியாது" என்றார்.
இம்தியாஸுடன் முதல் முறையாக இணைந்துள்ள அனுஷ்கா, "அவரது காதல் கதைகளில், கதாபாத்திரங்களுக்கு காதல் இருப்பதை அவர்கள் உணர மாட்டார்கள். அகப்பூர்வமான ஒரு பயணம் இருக்கும். ஆன்மாவின் தேடுதல் நடக்கும். அப்போதுதான் உணர்வார்கள். ஆண் - பெண் உறவைப் பற்றிய ஆழமான புரிதல் இம்தியாஸிடம் உள்ளது" என்று கூறினார்.
ஆகஸ்டு 4ஆம் தேதி படம் வெளியாகிறது.