

இந்தி நடிகர் இந்தர் குமார், திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 43.
இதுகுறித்து இந்தர் குமார் குடும்பத்தினர் கூறும்போது, ''அந்தேரியில் உள்ள அவரின் வீட்டில் இருக்கும்போது நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதில் இந்தர் குமார் உயிரிழந்தார்'' என்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு யாரி சாலை ஷம்ஷான் பூமியில் அவர் அடக்கம் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான படங்களில் நடித்துள்ள இந்தர் குமார், சல்மான் கானுடன் 'காஹின் பியார் நா ஹோ ஜாயே', 'தும்கோ நா பூல் பாயிங்கே', 'வான்டட்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ஏக்தா கபூரின் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அவர் நடித்துள்ளார்.
அவருடன் இணைந்து நடித்த நடிகை ரவீணா டாண்டன், ''அதிர்ச்சிகரமான செய்தி, இளம் வயதிலேயே இறந்துவிட்டார். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்'' என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.