

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மற்றும் குஜராத் மாநிலங்களில் இருப்பவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதி மூலம் நிதியளித்து உதவ வேண்டும் என, நடிகர் ஆமிர்கான் தனது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளத்தில் பின் தொடர்பவர்களைக் கோரியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் 80க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் 72 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அவசர நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது. சென்ற வாரம் வரை மட்டும் 123 பேர் வெள்ளத்தால் பலியாகியுள்ளதாகத் தெரிகிறது.
தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள ஆமிர்கான், "குஜராத் மற்றும் அசாமின் சில பகுதிகள் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். பலர் உயிரிழந்துள்ளனர். இயற்கையின் சக்திக்கு முன்னால் நம்மால் தாக்கு பிடிக்க முடியாது. ஆனால் நமது சகோதர சகோதரிகளுக்கு கண்டிப்பாக எதாவது செய்ய முடியும்.
நாம் இணைந்து வந்து குஜராத், அசாம் மக்களுக்கு உதவுவோம். இரண்டு மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் நாம் நிதி கொடுப்போம்" என அதில் பேசியுள்ளார்.