

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய தேசியக் கொடியை தலைகீழாக பிடித்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கோரியுள்ளார் அக்ஷய்குமார்.
ஜூலை 23-ம் தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெற்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பார்வையாளராக நடிகர் அக்ஷய்குமார் கலந்து கொண்டார்.
முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, கையில் இந்திய தேசிய கொடியைப் பிடித்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில் இந்திய தேசியக் கொடியை தலைகீழாக பிடித்திருந்தார். இதனால், ட்விட்டர் பக்கத்தில் அக்ஷய்குமார் கடுமையான கிண்டலுக்கு ஆளானார்.
இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தை உடனடியாக நீக்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து, "மூவர்ணம் சார்ந்த நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக மனமார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. அந்த படம் நீக்கப்பட்டுவிட்டது" என்று தெரிவித்துள்ளார் அக்ஷய்குமார்.