

ஹேமமாலினி, ஐஸ்வர்யா ராய், பாலிவுட் இயக்குநர் ஷூஜித் சிர்கார், நடிகை ஜீனத் அமன் ஆகியோருக்கு தாதாசாஹேப் பால்கே விருதுகள் வழங்கப்பட்டன.
மும்பையில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் இந்த விழாவில் பங்கேற்றனார்.
இந்த வருடம், ஐஸ்வர்யா ராய் பச்சன், சரப்ஜீத் படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றார். கலாஸ்ரீ விருது ஹேமமாலினிக்கு வழங்கப்பட்டது.
பழம்பெரும் நடிகை ஜீனத் அமனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. க்ரியேட்டிவ் இயக்குநர் விருதினை பிங்க் படத்துக்காக ஷூஜித் சிர்காரும், சிறந்த எதிர்மறை கதாபாத்திரத்துக்காக காபில் படத்தில் நடித்த ரோஹித் ராயும் விருதுகள் வென்றனர்.
இந்திய சினிமாவின் வளர்ச்சிக்காக பங்காற்றிய சிறந்த ஆளுமைகளுக்கு வருடாவருடம் தாதாசாஹேப் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படும் தாதாசாஹேப் பால்கேவின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, சித்ரா ப்ரொடக்ஷன்ஸ் அமைப்பும், தாதாசாஹேப் விருதுகள் குழுவும் சேர்ந்து ஒவ்வொரு வருடமும் இவ்விழாவை நடத்துகிறது. 1969-ஆம் வருடம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருதை தேவிகா ராணி பெற்றார்.