

சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகி வரும் 'பத்மாவதி' படப்பிடிப்பு தளத்தின் 'செட்' மர்ம நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் தரப்பில்,"சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிவரும் 'பத்மாவதி' படம் தொடர்பான காட்சிகள் மகாராஷ்டிரா மாநிலத்தின் கோல்ஹாபூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அப்படத்தின் காட்சிகள் படமாக்கப்படவிருந்த செட்டை தீயிட்டுக் கொளுத்தினர். இதில் படத்திற்காக பயன்படவிருந்த ஆடைகள் தீப்பற்றிக் கொண்டன.
மேலும் மர்ம நபர்கள் திரைப்படக் குழுவின் வாகனங்கள் மீதும் தீவைக்க முயற்சியில் ஈடுபட்டு, பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்" என்றார்.
முன்னதாக ஜனவரி மாதம் ஜெய்ப்பூரில் 'பத்மாவதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது அப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் செட்டிற்குள் நுழைந்து அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கினர்.
பன்சாலி மற்றும் வயாகாம் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'பத்மாவதி'. இதில் தீபிகா படுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர், படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வருகிறார். இந்தப் படம் ராணி பத்மினி பற்றிய கதையைக் கொண்ட வரலாற்றுத் திரைப்படமாகும்.
வரலாற்றின் படி அலாவுதின் கில்ஜி, ராணி பத்மினியை தன் ஆசைக்கு இணங்க வைக்க கோட்டையை நோக்கி படையெடுப்பார். அப்போது கில்ஜியின் ஆசைக்கு இணங்க மறுத்த ராணி பத்மினி சில பெண்களுடன் தற்கொலை செய்து கொள்வார். இந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பன்சாலி ‘பத்மாவதி’ கதையை உருவாக்கி வருகிறார்.