Last Updated : 28 Nov, 2014 02:30 PM

 

Published : 28 Nov 2014 02:30 PM
Last Updated : 28 Nov 2014 02:30 PM

இயக்கும் கரங்கள்: அது வேறு உலகம்

யார் இவர்?

திரைக்கதை எழுத்தாளர் களும் இயக்குநர்களும் நிரம்பிய வீட்டில் பிறந்த ஸோயா, திரை இயக்குநர் ஆகாமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும். இன்றைக்குப் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத பெண் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் ஸோயா அக்தர்.

சினிமாவை ஆயுதம் போலப் பயன்படுத்தும் பெண் இயக்குநர்களின் படைப்புகளுடன் ஸோயாவின் படங்களை ஒப்பிடுவது சரியாக இருக்காது. அதேநேரம், அவரும் அவருடைய சகோதரர் ஃபர்ஹான் அக்தரும் நவீன மேல்தட்டு வர்க்க இளைஞர்களின் உலகத்தையும், அவர்களுடைய உணர்வுகளையும் நிஜத்துக்கு நெருக்கமாக தங்கள் படங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.

பின்னணி

மும்பையில் பிறந்த ஸோயா அக்தரின் அப்பா ஜாவேத் அக்தர் ஒரு கவிஞர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர். அம்மா ஹனி இரானியும் திரைக்கதை எழுத்தாளர். ஸோயாவின் இரட்டைச் சகோதரர் ஃபர்ஹான் அக்தரும் ஒரு இயக்குநர்தான்.

மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் படித்த ஸோயா, நியூ யார்க் பல்கலைக்கழகத் திரைப் பள்ளியில் பயின்றுள்ளார்.

ஆரம்பத்தில் நிறைய விளம்பரப் படங்களுடன், ஒரு ராக் இசைக் குழுவுக்காக ‘பிரைஸ் ஆஃப் புல்லட்ஸ்' என்ற மியூசிக் வீடியோவை இணைந்து இயக்கினார்.

முதல் அரும்பு

புத்தாயிரத்துக்குப் பிந்தைய பாலிவுட்டின் நவீனப் படங்களுள் ஒன்றாகக் கருதப்படும் ‘தில் சாஹ்தா ஹை' படத்தின் கதாபாத்திரத் தேர்வு இயக்குநராக இருந்தார்.

முதல் முழுநீளப் படமான ‘லவ் பை சான்ஸ்' பாலிவுட்டில் காலூன்ற நினைக்கும் ஒரு இளைஞன், அதற்காகத் தன்னுடைய நட்பு-காதலை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறான் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருந்ததற்காகக் கவனிக்கப்பட்டார். ஃபர்ஹான் அக்தரும் கொங்கனா சென் சர்மாவும் நடித்திருந்தார்கள்.

முக்கியப் படைப்புகள்

‘ஜிந்தகி நா மிலேகி துபாரா' படமும் ‘தில் சாஹ்தா ஹை' படத்தைப் போலவே மூன்று மேல்தட்டு வர்க்க இளைஞர்களைப் பற்றியது. ஸ்பெயி னில் 3 சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செல்லும் போது அவர்களுடைய நட்பு, காதலில் என்ன விதமான உரசல் ஏற்படுகிறது, வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதைப் பற்றிய கதை. ஹ்ரித்திக் ரோஷன், அபே தியோல், ஃபர்ஹான் அக்தர், கத்ரீனா கைஃப், கல்கி கேக்லான் எனப் பெரும் நடிகர் பட்டாளம் நடித்திருந்தது.

இந்திய சினிமா நூற் றாண்டை ஒட்டி பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களின் தொகுப்புப் படமான ‘பாம்பே டாக்கீஸ்'-ல் ‘ஷீலா கி ஜவானி' என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார்.

அப்பா வலியுறுத்தும் கால்பந்து விளையாட்டுக்குப் பதிலாக, பாலிவுட் டான்சராக விரும்பும் பன்னிரெண்டு வயதுப் பையனைப் பற்றியது. பழமைவாதங்களை உடைத்து, கனவைப் பின்தொடருமாறு ஒரு பேட்டியில் நடிகை கத்ரீனா கைஃப் சொல்ல, அதையே வேதம் போல நினைக்கிறான் அந்தச் சிறுவன். கத்ரீனா கைஃபின் ரசிகனான அவன், பெற்றோர் இல்லாதபோது பெண் உடை அணிந்து “ஷீலா கி ஜவானி” பாட்டுக்கு ஆட ஆரம்பிக்கிறான். ஒரு நாள் பெற்றோரிடம் பிடிபட்டு, அடி வாங்குகிறான். ஆனாலும், தனது தங்கை டூர் செல்வதற்குப் பணம் திரட்டச் சிறு நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அதில் தனக்குப் பிடித்த பாடல்களுக்கு ஆடித் தீர்க்கிறான்.

தனித்தன்மை

பாலிவுட் படங்களுக்கு மாறாக ஸோயாவின் படங்களில் காட்டப்படும் காதல்-உறவு சார்ந்த பிரச்சினைகள் நிஜத்துக்கு நெருக்கமாக இருப்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். நாயகனும் நாயகியும் கடைசிக் காட்சியிலாவது சேர்ந்துவிட வேண்டும் என்பது போன்ற தேய்ந்துபோன சென்டிமெண்ட்களை உடைத்து, இயல்பாகக் காட்டியிருப்பார்.

தெரியுமா?

ஸோயாவின் இரண்டு முழு நீளப் படங்களிலும் அடுத்து அவர் எடுத்துவரும் ‘தில் தடக்னே தோ' படத்திலும் அவருடைய இரட்டைச் சகோதரர் ஃபர்ஹான் அக்தர் நடித்துள்ளார். மீரா நாயரின் 'காமசூத்ரா' திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் ஸோயா நடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x