

இயக்குநர் ரோஹித் ஷெட்டி - நடிகர் ஷாருக்கான் இணைப்பில் வெளியான 'சென்னை எக்ஸ்பிரஸ்' திரைப்படம் இந்தி திரையுலகின் பல சாதனைகளை முறியடித்துள்ளது.
ஷாருக்கான், தீபிகா படுகோன், சத்யராஜ் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கிய படம் 'சென்னை எக்ஸ்பிரஸ்'. இப்படத்தின் கதை தமிழ் இயக்குனர் சுபாஷ் உடையது. இப்படத்தை நடிகர் ஷாருக்கான் தனது ரெட் சில்லிஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க, யு.டிவி நிறுவனம் வெளியிட்டது.
இப்படம் வெளியான 4 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது. இந்தித் திரையுலகில் மிகவும் குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்த படம் 'சென்னை எக்ஸ்பிரஸ்'தான். அதுமட்டுமன்றி அமீர்கான் நடிப்பில் வெளியான '3 இடியட்ஸ்' படத்தின் வசூலையும், இப்படம் முறியடித்து இருக்கிறது. '3 இடியட்ஸ்' படம் 202 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால் 'சென்னை எக்ஸ்பிரஸ்' 225 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியும் இன்னும் சில திரையரங்குகளில் ஒடிக் கொண்டிருக்கிறது.
இயக்குனர்கள் வரிசையில் ரோஹித் ஷெட்டி படங்களில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' சேர்த்து இதுவரை 5 படங்கள் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி முதல் இடத்தில் இருக்கிறார். மற்ற இயக்குனர்கள் அனைவருமே தங்களது கணக்கில் ஒரு படம் மட்டுமே வைத்து இருக்கிறார்கள்.
நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான படங்களில் 4 படங்கள் 100 கோடி வசூலைத் தாண்டி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சல்மான் கான் தனது கணக்கில் 5 படங்கள் வைத்திருக்கிறார்.
நடிகைகள் பட்டியலில் அசின், கரீனா கபூர், சோனாக்ஷி சின்கா ஆகியோர் முதல் இடத்தில் 4 படங்கள் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி வைத்துதிருக்கிறார்கள்.
இந்த ஆண்டைப் பொறுத்தவரை, 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'ஏக் திவானிகா ஜவானி', 'பாக் மில்கா பாக்' மற்றும் 'ரேஸ் 2' ஆகிய நான்கு படங்களூம் இதுவரை தலா 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.