

அமீர்கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'தூம் 3' திரைப்படம் இந்தி பாக்ஸ் ஆபிஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து இருக்கிறது.
அமீர்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைஃப், உதய் சோப்ரா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'தூம் 3'. யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கி இருக்கிறார்.
டிசம்பர் 20ம் தேதி வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் வெளியான முதல் நாளில் சுமார் 36 கோடி வசூல் செய்திருக்கிறது. ஒரே நாளில் அதிகமாக வசூல் செய்த 'க்ரிஷ் 3' சாதனையை இப்படம் முறியடித்திருக்கிறது.
அதுமட்டுமன்றி, வெளியான 3 நாட்களில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'க்ரிஷ் 3' ஆகிய படங்கள் நான்கு நாட்களில் தான் 100 கோடி வசூலைத் தொட்டது. ஆனால் 'தூம் 3' படம் மூன்று நாட்களில் 100 கோடியைத் தாண்டியிருக்கிறது. வெளிநாடு பாக்ஸ் ஆபிஸிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது 'தூம் 3'.
இதனால், அமீர்கானை சாதனை நாயகன் என்று பல்வேறு பாலிவுட் விமர்சகர்கள் பாராட்டியிருக்கிறார்கள். முதல் 100 கோடி வசூலை தொட்டதது அமீர்கான் நடித்த 'கஜினி', முதல் 200 கோடி வசூலை தொட்டதது அமீர்கான் நடித்த '3 இடியட்ஸ்' என சாதனைகளை நிகழ்த்தியவர் அமீர்கான். கண்டிப்பாக 'தூம் 3' படத்தின் மூலம் 300 கோடியும் சாத்தியம் தான் என்று நிரூபிப்பார் என்று கூறியிருக்கிறார்கள்.