கபார் நாயகியாக கரீனா கபூர்?
'ரமணா' இந்தி ரீமேக்கான 'கபார்' படத்தில் கரீனா கபூரை நாயகியாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த், சிம்ரன் நடித்த 'ரமணா' படத்தினை இந்தியில் அக்ஷய் குமார் நடிக்க க்ரிஷ் இயக்குகிறார். படத்திற்கு 'கபார்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
'ரமணா' படத்தில் விஜயகாந்த்திற்கு ஜோடியாக சிம்ரனும், ஆஷிமா, விஜயன், யூகி சேது மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் இந்தி ரீமேக்கில் யார் நாயகிகளாக நடிக்க இருக்கிறார்கள் என்ற கேள்வி நிலவியது.
தற்போது சிம்ரன் வேடத்தில் நடிக்க கரீனா கபூரிடம் பேச்சு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். 'கபார்' படக்குழு “அக்ஷய் குமார் ஜோடியாக கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். ஆனால் இதுவரை அவரைத் தொடர்பு கொள்ளவில்லை. சிம்ரன் பாத்திரம் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்யலாம் என்றிருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.
தெலுங்கில் 'வேதம்' படத்தையும், அதன் தமிழ் ரீமேக்கான 'வானம்' படத்தையும் இயக்கிய க்ரிஷ் ’கபார்’ படத்தினை இயக்கவிருக்கிறார். “படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தான் நடைபெற்று வருகின்றன. இன்னும் நாயகிகள் குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை” என்று கூறியிருக்கிறார்.
இப்படத்தில் தமிழில் முன்னணி நடிகையான அமலா பால் நடிப்பார் என்று பேச்சு நிலவியது. ஆனால், இப்படத்தின் தேதிகள் குளறுபடியால் விலகிவிட்டார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறார்கள். ஆகஸ்ட் 15, 2014ல் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
