

ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடித்துள்ள 'ராம் லீலா' படத்தின் வெளியீட்டிற்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடிக்க, சஞ்சாய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் படம் 'ராம் லீலா'. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கம் என்பதால் இப்படத்திற்கு இந்தி திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் ’பிரபு சமாஜ் தர்மிக் ராம் லீலா குழு’ மற்றும் 5 நபர்கள் டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்கள்.
அம்மனுவில், “'ராம் லீலா' படம் இந்துக்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. செக்ஸ், வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகள் அதிகமாக உள்ளது.
’ராம் லீலா’ என்பது கடவுள் ராமரின் பெயரோடு தொடர்புடையது. இதனால் மக்கள் ராமரின் வாழ்க்கை பற்றிய படம் என்று நினைத்து தியேட்டருக்கு செல்வார்கள். அப்படி சென்று படம் பார்த்தால் அது அவர்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தும். அதனால் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரா படத்தினை வெளியிட இடைக்கால தடை விதித்தார். இப்படம் நவம்பர் 15ம் தேதி வெளியாக இருந்த நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.