

கிஷோர் குமார் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இன்னும் சில காலமாகும் என்று தெரிவித்திருக்கிறார் ரன்பீர் கபூர்.
மறைந்த பிரபல பாடகர் கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கத் திட்டமிட்டார் அனுராக் பாஷு. 'பர்ஃபி' படத்தில் ரன்பீர் கபூர் - அனுராக் பாஷு இணைந்து பணியாற்றிருப்பதால் இப்படத்திலும் இணைய திட்டமிட்டார்கள்.
ஆனால் அப்படத்தினை தற்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை என்று அறிவித்திருக்கிறார் ரன்பீர் கபூர்.
'பேஷ்ரம்' படத்தினை விளம்பரப்படுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பில் “பாடகர் கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க திட்டமிட்டேன். தற்போதைக்கு அப்படத்தினை தொடங்கும் எண்ணமில்லை.
படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் இன்னும் முடியவில்லை. படத்தின் கதை கிஷோர் குமாரின் வாழ்க்கையைப் பற்றியது என்பதால், படத்தின் திரைக்கதை சரிவர அமையாவிட்டால் அப்படத்தில் நடிப்பது தவறாக முடியும்.
அதனால், இப்போது அனுராக் இயக்கத்தில் 'ஜாக்கா ஜாஷுஸ்' படத்தில் நடிக்கிறேன். நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
'ஜாக்கா ஜாஷுஸ்' திரைப்படம் ஒரு துப்பறியும் கதை. இப்படத்தின் மூலம் முதன் முறையாக தயாரிப்பாளராகவும் ஆகியிருக்கிறார் ரன்பீர் கபூர். அனுராக் பாஷுவும் இவரும் இணைந்தே இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறார்கள்.
இப்படத்தினை தற்போதே யு.டிவி நிறுவனம் வாங்கிவிட்டது. விளம்பரப்படுத்தும் வகையில் டி.வி ஷோ, காமிக்ஸ் புத்தங்கள், அனிமேஷன், கார்ட்டூன்கள் என இப்போதே வெளிக்கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள்.
படம் வெளிவரும்போது மிகப்பெரிய ரசிகர் வட்டம் கிடைக்கும் என்பது தான் இவர்களின் மெகா திட்டமாக இருக்கிறது.