

தன் அடுத்த படம் ஷாருக்கானின் 'சென்னை எக்ஸ்பிரஸ்' வசூலை முறியடிக்கும் என்று தெரிவித்து இருக்கிறார் சல்மான்கான்
'பிக் பாஸ் 7' நிகழ்ச்சியை தொகுத்துத் வழங்கவிருக்கிறார் சல்மான் கான். அக்டோபர் 15 ஆம் தேதி முதல் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சல்மான் கான், “நான் ரம்ஜான் நோன்பின்போது ஷாருக்கானை கட்டிப்பிடித்தேன். நான் மட்டுமல்ல, அந்நேரத்தில் யாராக இருந்தாலும் அவ்வாறுதான் செய்வார்கள். அது ஒரு மனித இயல்பு.
எனக்கு அவர் மீது எந்த ஒரு வெறுப்புணர்வும் கிடையாது. என்னுடைய சாதனைகளை ஷாருக்கான் முறியடித்துவிட்டார் என்பது தெரியும். என்னுடைய அடுத்த படம் இதுவரை உள்ள அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும்.
அமீர்கான் நடிக்கும் 'தூம் 3', ரன்பீர் கபூரின் அடுத்த படம் என வரவிருக்கும் படங்கள் நிகழ்த்த இருக்கும் சாதனைகள் அனைத்தையும் எனது படம் முறியடிக்கும்.
கண்டிப்பாக ஷாருக்கானை 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு அழைப்பேன். ஒருவேளை அவர் வரவிரும்பினால், வந்து அவரது அடுத்த படத்தை விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். நான் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தயாராகத்தான் இருக்கிறேன்.
ஒருவேளை 'சத்யமாவே ஜெயதே' நிககழ்ச்சியை அமீர்கான் செய்ய விரும்பாவிட்டால், நான் கண்டிப்பாக செய்வேன். அந்நிகழ்ச்சி மட்டுமல்ல, அமிதாப் பச்சான் 'குரோர்பதி' நிகழ்ச்சியை நடத்துவதற்கு வயதாகிவிட்டது என்று கருதினால், அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவேன்” என்றார் சல்மான் கான்.
சல்மான் கான் நடிப்பில் அடுத்து 'மென்டல்' என்ற படம் அடுத்த ஆண்டு ஜனவரி 24 இல் வெளியாகவுள்ளது. இப்படம் தெலுங்கில் சீரஞ்சிவி - ஏ.ஆர்.முருகதாஸ் இணைப்பில் உருவான 'ஸ்டாலின்' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.