Last Updated : 20 Oct, 2013 04:05 PM

 

Published : 20 Oct 2013 04:05 PM
Last Updated : 20 Oct 2013 04:05 PM

ஷாஹித் எனும் திரை ஆயுதம்!

இறந்துபோன வழக்கறிஞர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து, அவர் சார்புள்ள நியாயங்கள் ஒரு தனி மனிதனால் மக்களின் முன்வைக்கப்படுகிறது. என்ன வித்தியாசம்? தடம் என்னவோ நீதிமன்றம் அல்ல... திரையரங்கம். இங்கே நியாயங்களை எடுத்து உரைப்பவர் வழக்கறிஞர் அல்ல... ஒரு படைப்பாளி, ஒரு நேர்மையான இயக்குனர். இறந்த மனிதர், கதையின் மைந்தன் 'ஷாஹித்'.

விதை முளைக்கையிலேயே விஸ்வரூபம் எடுப்பதல்ல. துளிர்விட்டு தளிர்விட்டுதான் ஆலமரமாகிறது. உயிருக்கு தப்பி ஓடி, தீவிரவாதிகளிடம் சேர்ந்து, பின் அங்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டு அஞ்சி ஓடி, வீட்டிற்கு திரும்பும் 'ஷாஹித்', சொந்த தேசத்தில் தீவிரவாதியாய் முத்திரை இடப்படுகிறான். சிறைக்குள் சட்டம் பயிலும் ஷாஹித், தான் வெளிவந்த பிறகு சமூகத்தில் நிகழ்த்தும் மாற்றங்கள்தான் இப்படத்தின் கதை.

மறுக்கப்படுகின்ற நீதியும், தாமதிக்கப்படுகிற நியாமும்தான் சமுதாயத்தில் நடக்கும் இழிபாடுகளுக்கு காரணம் என்பது பொதுவாக விழும் குற்றச்சாட்டு அல்லது சிலரின் கூற்று என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் 'எனக்கு மறுக்கப்பட்ட நீதிதான் நீதியின் தேவையை உணர்த்தியது, நான் சந்தித்த கொடுமைகள்தான் பிறரின் வலியை உணர வைத்தது' எனக் கூறுகிறது ஷாஹித். தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்ட அப்பாவி மனிதர்களை மீட்ட வழக்கறிஜர் 'ஷாஹித்'தின் வாழ்க்கைதான் இப்படம்.

தனி மனிதனோ அல்லது குழுவோ செய்யும் செயலுக்கு, ஒரு சமூகத்தின் மீது சேறு வீசப்படுவதை 'ஷாஹித்' முரண் ஏதுமின்றி எடுத்துரைக்கின்றது.

படம் தொடங்கிய சில நிமிடங்களிலே மும்பையில் நடந்த மதக் கலவரம், சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே ஓடிவரும் நாயகன், திடீரென அவன் அருகே ஓடிவரும் மனிதன், அவன் உடல் முழுதும் தீ, எங்கும் கும்பல் கும்பலாக மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்...

உயிருக்கு பயந்து ஓடும் நாயகன், வீட்டிற்குள் புக முயற்சிக்கிறான். எங்கே இவன் வருகையில் வேறு சிலர் புகுந்து மற்ற மூன்று பிள்ளைகளைக் கொன்று விடுவார்களோ என்ற அச்சத்தில் இவனது தாயே கதவைத் திறக்க மறுக்கிறார்.

இந்த வன்முறைக் களத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி கிடையாது. மாறாக மனிதர்களின் இரைச்சல். உயிர் போகும் வலியில் உருவாகும் சத்தம், கத்தி, கட்டைகளின் கீச்சிடல்கள். இந்தக் கலவர காட்சியின் நீளம் வெறும் ஐந்து முதல் ஆறு நிமிடங்கள்தான் இருக்கும்.

இயக்குநர் நினைத்திருந்தால் இக்காட்சியை பதினைந்து நிமிடங்களுக்கு ஓட விட்டு, சிம்பதியை கிளறி விட்டிருக்கலாம். ஆனால் இவரின் நோக்கம் அதுவல்ல, கதையின் முதல் பக்கங்கள்தான் அந்நிகழ்வுகள் என்பதை தெளிவாக உணர்ந்த இயக்குனராக ஹன்சல் மேஹ்தா தோன்றினார்.

அனுராக் கஷ்யப்பின் இயக்கத்தின் மீதுள்ள நம்பிக்கைக்கு ஈடாக - ஏன், அதை விட மிகுதியாக என்று கூட கூறலாம் - அவர் தயாரிக்கும் படங்களின் மீது அளவு கடந்த நம்பிக்கை வருகின்றது. கமர்ஷியல் சூட்சமத்திற்காக எவ்வித கலப்படமும் இங்கே நடைபபெறவில்லை.

படத்தின் முக்கிய ஹைலைட் கதாநாயகன் ராஜ்குமார் யாதவ். ஒரு பிலிம் ஸ்கூலில் படித்த முன்னணி மாணவன் போல் தான் இவரின் நடிப்பு தோன்றியது. கதாபாத்திரங்களுக்கு அமைக்கப்பட்ட வட்டாரம், கேரக்டர் ஸ்கெட்சிங் அனைத்தும் அத்தனை அழகாக வரையப்பட்டிருந்தது.

இது கமர்சியல் படம், இது ஆர்ட் பிலிம் என்ற பேதங்களை சமீபத்தில் வெளிவந்த ஷிப் ஆஃப் தீசஸ், லஞ்ச் பாக்ஸ் முதலிய படங்கள் உடைத்தெறிந்து கொண்டிருக்க... அவற்றோடு கைக்கோர்க்கும் ஆயுதமாக இப்போது 'ஷாஹித்' அமைந்துள்ளது.

தெளிவான நடை, நேர்த்தியான நடிப்பு, சுத்தியால் ஆணியடிப்பது போல் நறுக் நறுக் என அமைந்துள்ள நெத்தியடி வசனங்கள் ஷாஹித்தை தவறவிடக் கூடாத முக்கிய படமாய் மாற்றுகின்றது.

சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம்>https://www.facebook.com/CinemaPithan

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x