

மல்யுத்த வீரர் ஒருவரின் வாழ்க்கையை சொல்லும் 'சுல்தான்' படத்தில் சல்மான் கான் - அனுஷ்கா சர்மா இணைந்து நடித்துள்ளனர்.
இதில் மல்யுத்த வீரராக நடித்துள்ள சல்மான், இந்தியாவுக்காக தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் இருப்பார். தவிர்க்க முடியாத காரணங்களால் மல்யுத்தத்தை விட்டு விலகுபவர், சில காலங்கள் கழித்து திரும்புவார்.
ஆனால் வயது மற்றும் தகுதியை இழந்த அவரின் உடல், விளையாடத் தடையாக இருக்கும். பிறகு எப்படித் திரும்பவும் வெற்றியை அடைந்தார் என்பதே கதை என்று கூறப்படுகிறது.
சல்மானின் காதலியாக நடித்துள்ள அனுஷ்கா சர்மா, மல்யுத்த வீராங்கனையாக வருகிறார். இத்திரைப்படத்தை 'கூண்டே', 'மேரே பிரதர் கி துல்ஹான்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ளார். விஷால் சேகர் இசையமைத்துள்ள இந்தப் படம் ஜூலை 6-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
'சுல்தான்' படத்தின் இறிதிக் கட்ட படப்பிடிப்புக்காக, சல்மான் கான் மற்றும் அனுஷ்கா சர்மா ஹங்கேரிய நாட்டின் தலைநகரான புடபெஸ்ட் நகருக்கு சென்றிருக்கின்றனர்.
இறுதிக் கட்ட படப்பிடிப்பு
புடபெஸ்டில் படப்படிப்பை முடித்த சுல்தான் குழுவினர், ஜூன் 6 வரையிலும் கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் இறுதிக் கட்ட படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
படத்தின் கதை புடபெஸ்டில் நடப்பது போல அமைந்துள்ளதால் இங்கு படமாக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். புடபெஸ்ட் ஐரோப்பாவின் மல்யுத்த தலைநகராக கருதப்படுகிறது.