

'காசநோய் இல்லாத இந்தியா' என்னும் இந்திய அரசின் விழிப்புணர்வுப் பிரச்சாரத்துக்கு அமிதாப் பச்சன் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமிதாப், ''காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க நான் சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஆதரவு அளிக்கிறேன்.
முழுமை அடையாத காசநோய் சிகிச்சை, எந்த மருந்தையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். தயவு கூர்ந்து சிகிச்சையை மட்டும் இடையில் நிறுத்திவிடாதீர்கள்.
இதுவொன்றும் கண்டறிய முடியாத நோயோ, குணப்படுத்த முடியாத நோயோ அல்ல. காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குங்கள்'' என்று கூறியுள்ளார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, 'இந்தியா vs காசநோய்' பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். இதன் பிரச்சாரத் தூதுவராக அமிதாப் நியமிக்கப்பட்டுள்ளார். காசநோயில் இருந்து மீண்டு வந்தவரான 74 வயது அமிதாப், இதில் இணைந்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.
ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பிரச்சாரத்தில் நோய்க்கான அறிகுறிகள், முழுமையான சிகிச்சைக்கான தேவை, காசநோயால் குடும்பத்திலும், சமூகத்திலும் ஏற்படும் தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு புதிதாக 22 லட்சம் பேருக்கு காச நோய் வருகிறது. ஆண்டுக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் இறக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.