நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் சர்மா திருமணம் டெல்லியில் நடந்தது: நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து

நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் சர்மா திருமணம் டெல்லியில் நடந்தது: நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து
Updated on
1 min read

நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மா திருமணம் டெல்லியில் நேற்று நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.

மலையாளம், தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்த அசின் (30), தமிழில் 2004-ல் வெளிவந்த ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் அறிமுகமானார். ‘சிவகாசி’, ‘வரலாறு’, ‘போக்கிரி’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், ‘கஜினி’ படத்தின் இந்தி ரீமேக் படத்தில் நடித்ததன் மூலம் இந்தியில் வாய்ப்புகள் அதிகரித்தது.

இதற்கிடையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவுக்கும் (40), அசினுக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் சம்மதம் கிடைத்ததை அடுத்து, திருமண ஏற்பாடுகள் தீவிரமானது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள நட்சத்திர தனியார் விடுதியில் அசின் ராகுல் சர்மா திருமணம் நேற்று நடந்தது. காலையில் கிறிஸ்தவ முறைப்படியும், மாலையில் இந்து முறைப்படியும் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளிட்ட சில திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். திருமணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 23-ம் தேதி நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்களுக்கு அசின் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in