

'ராம் லீலா' படத்தை தன் தாய்க்கு சமர்ப்பிப்பதாக அறிவித்திருக்கிறார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.
இந்தி திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் என்றால் அது சஞ்சய் லீலா பன்சாலி தான். அவரது படங்களின் ஒவ்வொரு காட்சியையும் பிரமாண்டமாக காட்சிப்படுத்துவார். அவரது இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘ராம் லீலா’. ரன்வீர் கபூர், தீபிகா படுகோன் நடித்து இருக்கும் படத்தினை தயாரித்து இயக்கி இருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி. இப்படத்தினை நவம்பர் 29ம் தேதி ஈராஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
'ராம் லீலா' படத்தை டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்களிடம் சஞ்சய் லீலா பன்சாலி பேசும்போது, " ‘ராம் லீலா’ படம் எனது மிகவும் முக்கியமான படமாகும். என் அம்மாவிற்காக நான் உருவாக்கி இருக்கிறேன்.
ரன்வீர் கபூர் ஓர் அற்புதமான நடிகர். இப்படத்தை உருவாக்கும்போது சந்தோஷமாக இருந்தது. தீபிகாவிற்கு இச்சமயத்தில் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். லீலா என்ற கதாபாத்திரத்தில் மிக அற்புதமாக நடித்து இருக்கிறார்.
'லீலா பன்சாலி' என்கிற எனது அம்மா பெயரில் இருந்து தான் லீலா என்ற பெயரை எடுத்து படத்திற்கு வைத்தேன். 'ராம் லீலா' படத்தை என் அம்மாவிற்கு காணிக்கையாக்குகிறேன்" என்று தெரிவித்தார்.