500 கோடி வசூலைத் தாண்டியது தூம் 3

500 கோடி வசூலைத் தாண்டியது தூம் 3
Updated on
1 min read

ஆமிர்கான் நடிப்பில் வெளியான 'தூம் 3' திரைப்படம் 500 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.

ஆமிர்கான், அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா, கத்ரினா கைஃப் மற்றும் பலர் நடிக்க, விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கிய படம் 'தூம் 3'. யாஷ் ராஜ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வெளியிட்டது.

டிசம்பர் 20ம் தேதி வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் வெளியான முதல் நாளில் சுமார் 36 கோடி வசூல் செய்தது. அதுமட்டுமன்றி, வெளியான 3 நாட்களில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் இதற்கு முந்தைய அனைத்து இந்தி படங்களின் சாதனைகளை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தது.

இவ்வாறு பல்வேறு சாதனைகளைப் படைத்து வந்தாலும், பாலிவுட் விமர்சகர்கள் பலரும் படத்தின் வசூலை 300 கோடி, 400 கோடி என கணக்குகளை வெளியிட்டார்கள். ஆனால், அதிகாரப்பூர்வமாக யாஷ் ராஜ் நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் 'தூம் 3' வசூல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது யாஷ் ராஜ் நிறுவனம். அந்த அறிக்கையில், "இந்தியா மற்றும் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது 'தூம் 3'. வசூலில் 500 கோடியைத் தாண்டிய முதல் இந்திய திரைப்படம் 'தூம் 3' என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

டிசம்பர் 20ம் தேதி வெளியான இப்படம், இதுவரை 501.35 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்தியாவில் 351.29 கோடியும், வெளிநாடுகளில் 150.06 கோடியும் வசூல் செய்திருக்கிறது. ” என்று அறிவித்துள்ளது.

ஜெர்மனி, ரோமானியா, ஜப்பான், ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட சில நாடுகளில் இன்னும் 'தூம் 3' வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in