தீபாவளிக்கு கோல்மால் 4 வெளியீடு: இந்தியில் சிறு பின்னடைவை சந்திக்கும் 2.0

தீபாவளிக்கு கோல்மால் 4 வெளியீடு: இந்தியில் சிறு பின்னடைவை சந்திக்கும் 2.0
Updated on
1 min read

தீபாவளிக்கு ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகும் 'கோல்மால் 4' வெளியாகும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, '2.0' படத்துக்கு இந்தியில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் படத்தை லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற '2.0' பர்ஸ்ட் லுக் விழாவில், 2017ம் ஆண்டு தீபாவளி வெளியீடு என்று படக்குழு அறிவித்தது.

இந்தி திரையுலகில் எப்போதுமே ஒரு படம் தொடங்கப்படும் போதே, வெளியீட்டு தேதியை முடிவு செய்துவிடுவார்கள். அந்த வகையில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் 'கோல்மால் 4' 2017 தீபாவளி வெளியீடு என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் '2.0' தீபாவளி வெளியீடு என்று அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, 'கோல்மால் 4' தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது. இதனால் தீபாவளிக்கு '2.0' மட்டும் தான் இந்தியில் வெளியீட்டு என்ற சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், 'கோல்மால் 4' படக்குழு தங்களுடைய வெளியீட்டை தீபாவளிக்கு உறுதிப்படுத்தியுள்ளது. முன்னணி இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் திரையரங்குகள் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், '2.0' படத்தின் வசூலை இது சிறு அளவில் பாதிக்கக்கூடும்.

'2.0' படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிந்துவிட்டது. தற்போது கிராபிக்ஸ் காட்சிகளை முடிக்க முழுவீச்சில் பணியாற்றி வருகிறது படக்குழு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in