

ஷாருக்கான் நலமாக இருக்கிறார். விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று அறிவித்திருக்கிறார்கள்.
ஷாருக்கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பல இந்தி முன்னணி நடிகர்கள் நடித்து வரும் படம் 'ஹேப்பி நியூ இயர்'. ஃபாரா கான் இயக்கி வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது.
மும்பை ஜுகு பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நேற்று படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது ஹோட்டலின் கதவு முறிந்து ஷாருக் கான் மீது விழுந்துள்ளது. இதனால் ஷாருக்கான் தலையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியிருக்கிறது.
உடனடியாக நானாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஷாருக்கானுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், "ஷாருக்கானுக்கு லேசான காயம் தான் ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சையளித்து வருகிறோம். தற்போது அவர் நலமாக உள்ளார்" என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இது குறித்து ஷாருக்கான் அலுவலகம் அளித்துள்ள அறிக்கையில், "ஷாருக்கானுக்கு லேசான காயம் தான். தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.