Published : 18 Nov 2013 09:48 AM
Last Updated : 18 Nov 2013 09:48 AM

‘கோலியோன் கி ராஸலீலா ராம்லீலா’ துப்பாக்கியை வருடும் மயிலிறகு

தலைமுறைகளாகத் தொடரும் பகையின் வேர் எதுவென்று அறியாமலேயே, பகைவர்கள் குறித்த வெறுப்பையும், கசப்பையும் பாரம்பரியச் சொத்தை போலத் தங்கள் வாரிசுகளிடம் விட்டுச்செல்கின்றனர் சில மனிதர்கள். எதிரெதிரான இருபிரிவைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள் என்று அறிய நேர்ந்தால் அதைத் தங்கள் பகையைத் தீர்த்துக்கொள்ள ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தவும் அவர்கள் தயங்குவதில்லை. ஆங்கில நாடக இலக்கியத்தின் பிதாமகனான ஷேக்ஸ்பியர் எழுதிய ‘ரோமியோ ஜூலியட்’ கதையின் அடிப்படை இது தான். எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கிய ‘அம்பிகாபதி’ தொடங்கி இன்றும் பல படங்களின் மையமாக இந்தக் கதை இருக்கிறது.

வணிக ரீதியான படங்களின் நீட்சியாக அழகியல் சார்ந்த படைப்பூக்கத்துடன் திரைப்படம் எடுக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் சஞ்சய்லீலா பன்ஸாலி. சில தோல்விப் படங்களுக்குப் பின்னர், அவர் இயக்கியிருக்கும் ‘கோலியோன் கி ராஸலீலா ராம்லீலா’ பிரமிக்க வைக்கும் அரங்கங்கள், மனதை நிறைக்கும் வண்ணங்கள், நடிகர்களின் தேர்ந்த கலைவெளிப்பாடு என்று பிரம்மாண்டமான திரையில் வரையப்பட்ட சித்திரமாக வெளியாகியிருக்கிறது. இந்த முறை பன்சாலி தனது கலைத்திறனின் அத்தனை சாத்தியங்களையும் பயன்படுத்தியிருக்கிறார்.

தொடக்கக் காட்சியில் குஜராத்தின் ஒரு சிறு நகரத்துக்குள் வந்திறங்கும் நகரவாசி ஒருவர் தன் நண்பரிடம் அந்தச் சிறு நகரம் பற்றி விவரிக்கும் காட்சி, படத்தின் பின்னணியைப் பார்வையாளர்களுக்கு உணர்த்திவிடுகிறது. புடலங்காய்கள் தொங்குவதுபோல் கடைகளில் தொங்குகின்றன வகைவகையான துப்பாக்கிகள். சட்டத்தின் கரங்கள் தொடமுடியாத தூரத்தில் தங்களுக்கான நீதியைத் தாங்களே தீர்மானிக்கும் மக்கள் வாழும் பகுதி அது. வணிகப் பின்னணியில் அருகருகே வாழநேரும் ரஜாடி மற்றும் சனேடா என்ற இரு பிரிவைச் சேர்ந்த மக்கள் மிகச்சிறிய சம்பவத்தைக் கூடத் தங்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்திக் கலவரமாக மாற்றத் தயாராக இருப்பவர்கள். மாடியிலிருந்து சிறுநீர் கழித்த சிறுவனைத் துரத்திச் சென்று சுட்டுக்கொல்ல முயலும் சனேடா பிரிவினரின் தலைமைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை ரஜாடி இனத்தைச் சேர்ந்த இளைஞன் காதலிக்கிறான். இருபிரிவினரும் மோதிக்கொள்ள அதுவே காரணமாகிறது. தங்கள் காதலை விட இருபிரிவினரின் ஒற்றுமை தான் பிரதானம் என முடிவெடுக்கின்றனர் காதலர்கள்.

படத்தில் ஆரவாரமான பாடலுடன் அறிமுகமாகும் ரண்வீர் சிங் சட்டையில்லாத இன்னொரு சல்மான் கானோ என்று நினைக்கவைத்தாலும் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில் தேர்ந்த நடிகன் என்று இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். ஹோலிப் பண்டிகையைப் பயன்படுத்தி எதிரி இனப் பெண்களைச் சீண்டுவற்காக செல்லும் ராம் (ரண்வீர்), அழகும் துணிச்சலும் நிறைந்த லீலா(தீபிகா படுகோன்)வைக் கண்டதும் காதல் கொள்கிறார். ரோமியோ ஜூலியட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால், புகழ் பெற்ற பால்கனி காட்சியும் இப்படத்தில் இடம்பெறுகிறது. காமமும் காதலும் உடலெங்கும் ததும்ப வீட்டின் மாடியில் இரவில் காதலர்கள் சந்தித்து உரையாடும் காட்சியில், இருவரின் நடிப்பும் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. குஜராத் போன்ற வணிகம் சார்ந்த சிறு நகரங்களில் வசிக்கும் இளைஞர்களின் பழக்கவழக்கங்கள், பேசும் முறை, செல்போன் போன்ற நவீன கருவிகளைத் தங்கள் பாணியில் பயன்படுத்தும் முறை என்று பல்வேறு விஷயங்களை ரண்வீர் மூலம் பிரதியெடுத்திருக்கிறார் பன்சாலி. அதேபோல அதிகாரம் குவிந்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் உலகில், ஆதிக்கம் செலுத்தும் மூத்தவர்கள், பாரம்பரியத்தைப் பேணக் கட்டாயப்படுத்தப்படும் இளம் தலைமுறைப் பெண்கள் ஆகியவர்களுக்கு இடையிலான உறவுச்சிக்கல் போன்ற விஷயங்களையும் கதையோட்டத்தின் வேகத்திலேயே நுணுக்கமாகப் பதிவுசெய்திருக்கிறார்.

தீபிகா படுகோனின் அம்மாவாக வரும் சுப்ரியா பதக், அநாயசமான நடிப்பால் மிரளவைக்கிறார். தன் மகளுக்குப் பார்த்திருக்கும் லண்டன் மருமகனையும் அவனது குடும்பத்தினரையும் அலட்சியமாக மிரட்டும் காட்சி ஒன்றுபோதும். அதேபோல், தன் ஆட்களை அடித்து வீழ்த்திவிட்டுத் தைரியமாகத் தன் முன் நின்று பேசும் ரண்வீரிடம், “இதை நீ போனிலேயே சொல்லியிருக்கலாமே. எதற்காக இத்தனை சிரமப்படுகிறாய்” என்று புன்முறுவலுடன் கேட்கும் காட்சியிலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். அசாத்தியமான உயரமும், கம்பீரமான அழகும் கொண்ட தீபிகா படுகோன் காதலும் துயரமும் தேங்கிய கண்கள் மூலம் பல காட்சிகளைச் சிறக்கச் செய்திருக்கிறார். காதலியைப் பிரிந்த வலியுடன் பகைவெறி கொண்ட தன் இனத்தவர்களின் தலைவனாகப் பொறுப்பேற்க நேரும் பாத்திரத்தில் தனது நடிப்பின் முதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் ரண்வீர். இந்தப்படம் அவரை பாலிவுட்டின் முக்கிய நடிகர் என்ற இடத்தில் அமரவைக்கும். சஞ்சய் லீலா பன்ஸாலியின் இசையும், ரவிவர்மனின் ஒளிப்பதிவும் படத்தின் தூண்கள். பல காட்சிகளின் ஒளியமைப்பில் தன் முத்திரையைப் பதித்திருக்கும் ரவிவர்மன் பாராட்டுக்குரியவர்.

மனிதர்கள் தங்களுக்கிடையில் பகிரும் பரிசுகளில் அன்பைத் தவிர சிறந்தது வேறொன்றுமில்லை என்று சொல்லும் படைப்பு இது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x