

பாலிவுட் நடிகை சன்னி லியோனியுடன் இணைந்து பணிபுரிவதில் தனக்கு மகிழ்ச்சியே என்றும், அவரது கடந்த காலம் குறித்து தனக்கு எந்த பிரச்சினையும் என்று நடிகர் ஆமிர் கான் கூறியுள்ளார்.
சி.என்.என். ஐ.பி.என். சேனலுக்கு சமீபத்தில் நடிகை சன்னி லியோன் சிறப்புப் பேட்டி அளித்தார். சுமார் 20 நிமிட பேட்டியில், அவரது கடந்த காலம் குறித்த துருவித் துருவி கேட்கப்பட்டது. போர்னோ படங்களில் நடித்ததைச் சுட்டிக்காட்டி கேட்கப்பட்ட அந்தக் கேள்விகளுக்கு மிக நிதானமாகவும் தெளிவாகவும் அவர் பதிலளித்தார்.
அந்தப் பேட்டியின்போது, "நிறைய நடிகர்கள் உங்களுடன் நடிக்கத் தயங்குகிறார்களே?" என்று கேட்கப்பட்டதற்கு, "அதுபற்றி எனக்கு கவலையில்லை" என்றார் சன்னி லியோனி. அப்போது, "உங்களுடன் ஆமீர் கான் இணைந்து பணியாற்றுவார் என்று நினைக்கிறீர்களா?" என்று பேட்டி எடுத்தவர் கேட்க, "என்னுடன் அவர் நடிப்பார் என்று கருதவில்லை" என்றார்.
அதன்பின், "நீங்கள் அவருடன் நடிக்க விரும்புகிறீர்களா?" என்றதற்கு, "ஆம். அவர் மிகச் சிறந்த நடிகர். எனக்குப் பிடித்த கலைஞர். அவருடன் நடிக்க விரும்புகிறேன்" என்றதும், "நீங்கள் அவருடன் நடிக்க விரும்புகிறீர்கள். ஆனால், அவர் நடிக்க மாட்டார் என்றால் பின்னணி காரணம் என்ன?" கேட்டுத் துளைத்தபோது, "அது என் கடந்த காலமாக இருக்கலாம். ஆனால், நீங்கள்தான் அவரைக் குறிப்பிட்டீர்கள். அவர் என்னுடன் நடிப்பாரா நடிக்க மாட்டாரா என்பதை நான் எப்படித் தீர்க்கமாகச் சொல்ல முடியும்?" என்றார் சன்னி லியோனி.
ஒட்டுமொத்தமாக, இந்தப் பேட்டி பாலிவுட் உலகில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பாலிவுட்டில் முழு நேர நடிகையாகிவிட்ட ஒருவரை, அவரது கடந்த காலத்தையொட்டி மட்டுமே பேட்டி கண்டது மலிவான அணுகுமுறை என்று பிரபலங்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேநேரத்தில், அந்தப் பேட்டியை தைரியமாக எதிர்கொண்ட சன்னி லியோனியை அவர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
இந்தச் சூழலில், ஆமீர் கான் தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் சன்னி லியோனியை பேட்டி எடுத்த விதத்தை விமர்சித்து ஒரு குறும்பதிவிட்டுள்ளார்.
அதில், "ஆம் சன்னி, உங்களுடன் இணைந்து பணிபுரிவதில் நான் மகிழ்ச்சி அடைவேன். பேட்டி கண்டவர் முன்வைத்ததைப் போல் உங்களது 'கடந்த காலம்' குறித்து எனக்கு துளியும் பிரச்சினை இல்லை" என்று ஆமிர் கான் கூறியுள்ளார். இந்தப் பதிவைப் பகிர்ந்த நடிகை சன்னி லியோனி, உங்கள் மீதான மதிப்பு மென்மேலும் உயர்ந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆமீர் கானின் பதிவை ஆயிரக்கணக்கான இணையவாசிகள் தொடர்ந்து பாராட்டியவண்ணம் உள்ளனர்.