

பிரபல பாலிவுட் நடிகரும் மக்களவை எம்.பி.யுமான வினோத் கன்னா, உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 70.
கடந்த 1968-ம் ஆண்டு ‘மான் கா மீட்’ என்ற பாலிவுட் படத்தில் முதல்முறையாக நடித்தார் வினோத் கன்னா. அதன்பின், வில்லன் மற்றும் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார். கடந்த 1971-ம் ஆண்டு குல்சாரின் ‘மேரே அப்னே’ என்ற திரைப்படம் தான் வினோத் கன்னாவின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியது.
கடந்த 70-ம் ஆண்டு முதல் 80-ம் ஆண்டு வரை ‘மேரே கோன் மேரா தேஷ்’, ‘ரேஷ்மா அவுட் ஷெரா’, ‘எலன்’, ‘இன்சாப்’, ‘தயான்’ ‘குர்பானி’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தார். அமர் அக்பர் அந்தோணி உட்பட பல படங்களில் அமிதாப்புடன் சேர்ந்து நடித்தார்.
பிரபலமான நடிகராக வலம் வந்த வினோத் கன்னா, கடந்த 1982-ம் ஆண்டு திடீரென ஓஷோ ரஜ்னீஷ்ஷின் ஆசிரமத்தில் (புனே) சேர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் 5 ஆண்டுகள் அவர் நடிக்கவில்லை. 80-களின் கடைசியில் மீண்டும் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கினார். கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஷாருக்கானின் ‘தில்வாலே’ படத்தில் நடித்தார்.
இந்நிலையில், சிறுநீர் பையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் வினோத் கன்னா. மும்பையில் உள்ள ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனையில் கடந்த மார்ச் 31-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல், நேற்று காலை 11.20 மணிக்கு காலாமானார். இத் தகவலை வினோத் கன்னாவின் சகோதரர் பிரமோத் கன்னா நேற்று தெரிவித்தார்.
மறைந்த வினோத் கன்னா பாஜக.வில் சேர்ந்து பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் போட்டி யிட்டு 4 முறை எம்.பி.யானவர்.
மறைந்த வினோத் கன்னாவின் முதல் மனைவி கீதாஞ்சலி. இவர்களுக்கு ராகுல், அக்்ஷய் ஆகிம மகன்கள் உள்ளனர். வினோத் கன்னாவின் 2-வது மனைவி கவிதா கன்னா. இவர்களுக்கு சாக்்ஷி, ஷிரதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
வினோத் கன்னா மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரஜினி, கமல் இரங்கல்
ரஜினி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “எனது இனிய நண்பர் வினோத் கன்னா மறைவால் ஏற்பட்டுள்ள வெறுமை எங்களை வாட்டும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். வினோத் கன்னா மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “வினோத் கன்னா ஒரு வீரமான போராளி, திரைப்படங்களில் மட்டுமல்ல, புற்றுநோய்க்கு எதிராகவும் துணிச்சலாக போராடியவர். அவருடைய பணிகள் நினைவுகூரத் தக்கவை. இனியும் வலியில்லை தேவையில்லை வினோத் பாய்” என்று தெரிவித்துள்ளார்.