

ஆமிர்கான் தொகுத்து வழங்கிய 'சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சி, மீண்டும் மார்ச் 2ம் தேதி முதல் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் ஆமிர்கான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி 'சத்யமேவ ஜெயதே'. மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
பெண் சிசுக் கொலை, சாதிக் கொடுமைகள், வன்முறை போன்ற பல்வேறு சமூக பிரச்சினைகளை முன்னிறுத்தி, அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி மக்களிடையே பல்வேறு உண்மைகளை போட்டுடைத்தது. வரவேற்பு கிடைத்ததோடு பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்தார் ஆமிர்கான்.
தற்போது, 'சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சியின் அடுத்த பாகத்தை மார்ச் 2ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவிருக்கிறார். ஒவ்வொரு சமூகப் பிரச்சினை தொடர்பான விவாதத்தையும் நான்கு பாகங்களாக பிரித்து ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இதற்கான விளம்பரமே தற்போது யு.டியூப் தளத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.