

'அகிரா' படம் செப்டம்பர் 2-ம் தேதி வெளியாகும் என்று நடிகை சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோனாக்ஷி சின்ஹா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''ஏ.ஆர்.முருகதாஸ் என்னை முழுமையாக மாற்றியுள்ள 'அகிரா' படத்துக்காக நீங்களும், நானும் இனிமேலும் காத்திருக்க வேண்டியதில்லை. இதோ படத்தை செப்டம்பர் 2-ல் வெளியிட உள்ளோம்'' என்று கூறியிருக்கிறார்.
ஏராளமான தீவிர பயிற்சிகளுக்கு பின்னர் ஆக்ஷன் அவதாரத்தில் சோனாக்ஷி நடித்துள்ள படம் 'அகிரா'. அந்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களைக் கவரும் வகையில் படமாக்கப்பட்டு உள்ளதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.
'ஹாலிடே: எ சோல்ஜர் ஈஸ் நெவர் ஆஃப் ட்யூட்டி' படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் இரண்டாவது படம் 'அகிரா'. இதில் வீரமிக்க பல கலைகளில் சோனாக்ஷி ஈடுபடுகிறார்.
'அகிரா' படத்தில், சோனாக்ஷியின் தந்தை மற்றும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹாவும் இடம்பெற்றிருக்கிறார்.
'அகிரா' படம் 'மௌனகுரு' தமிழ்த் திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.