

ஆஸ்கர் விழாவில் ஓம்புரிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதை முன்வைத்து பாலிவுட் விருது விழாவை கடுமையாக சாடியுள்ளார் நவாஸுதின் சித்திக்.
இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஓம் புரி. இந்தியாவில் உருவான படங்கள் மட்டுமன்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தயாரான படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஜனவரி 6-ம் தேதியன்று திடீர் மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை 89-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் மறைந்த நடிகர் ஓம்புரிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் நவாஸுதின் சித்திக் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆஸ்கர் விழாவில் ஓம்புரிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆனால் பாலிவுட்டின் ஒரு விருது வழங்கும் விழாவிலும், யாரும் அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வெட்கக்கேடு" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.