

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் வீட்டில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. மும்பை மேற்கு பந்த்ரா பகுதியில் அமைந்துள்ளது நடிகர் ஷாரூக்கானின் பங்களா வீடு 'மன்னத்'.
நேற்று, (வியாழக்கிழமை) அவரது வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட உடன் எச்சரிக்கை மணி ஒலித்ததையடுத்து பாதுகாவலர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு சென்று தீயை அணைத்தனர்.
குளியல் அறையில் அமைக்கப்பட்டுள்ள மின் விசிறியில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்திற்கு காரணம் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாவரும் நலம் :
ஷாருக்கானின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட செய்தி சமூக வலைதளங்களிலும் டிரண்ட் ஆக தொடங்கியவுடன், நடிகர் ஷாருக் தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில், "வீட்டில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் உள்ள அனைவரும் நலமாக இருக்கிறோம். அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.