

ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடித்துள்ள 'ராம் லீலா' படத்தின் வெளியீட்டிற்கு டெல்லி நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை நீக்கம்.
ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடிக்க, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் படம் 'ராம் லீலா'. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கம் என்பதால் இப்படத்திற்கு இந்தி திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் ’பிரபு சமாஜ் தர்மிக் ராம் லீலா குழு’ மற்றும் 5 நபர்கள் டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்கள்.
அம்மனுவில், ‘ராம் லீலா‘ என்பது இந்துக்கள் கடவுளாக வழிபடும் ராமபிரானை தொடர்பு படுத்துவதாக உள்ளது. மேலும் இப்படத்தை பார்க்கும் மக்களுக்கு, தெய்வமாக வணங்கப்படும் ஸ்ரீராமரின் வாழ்க்கையில் நடந்த கதையாக இருக்குமோ என்று எண்ணத்தை ஏற்படுத்தும். எனவே ‘ராம் லீலா‘ படத்தை தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ‘ராம் லீலா‘ படத்திற்கு இடைக்கால தடை விதித்தார்.
இதனைத் தொடர்ந்து ஈராஸ் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் அமித் சிபல் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதியிடம் ’ராம் லீலா’ படத்திற்கு தடை விதிக்க மறுத்துடன் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்த’ டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு நகலை அளித்தார்.
அதுமட்டுமன்றி படத்தின் முழுத்தலைப்பு ராம் லீலா: கோலியான் கி ராஸ்லீலா என்பதையும் சிபல் நீதிபதியிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதி, படத்திற்கான தனது தடை உத்தரவை வாபஸ் பெற்றார்.