Published : 28 Jan 2017 14:23 pm

Updated : 16 Jun 2017 12:10 pm

 

Published : 28 Jan 2017 02:23 PM
Last Updated : 16 Jun 2017 12:10 PM

பத்மாவதி படப்பிடிப்பில் பன்சாலி மீது தாக்குதல்: இந்தி திரையுலகினர் கடும் எதிர்ப்பு

'பத்மாவதி' படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்தி திரையுலகினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்கள்.

ஜெய்ப்பூரில் ‘பத்மாவதி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி ஆர்பாட்டக்காரர்கள் செட்டிற்குள் நுழைந்து அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கினர்.


செட்டில் ஆர்பாட்டக்காரர்கள் புகுந்து உபகரணங்களை அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் பன்சாலியை அடித்து அவரது முடியை பிடித்து இழுத்ததாகவும் ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன.

பன்சாலி மற்றும் வயாகாம் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'பத்மாவதி'. இதில் தீபிகா பதுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர், படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வருகிறார். இந்தப் படம் ராணி பத்மினி பற்றிய கதையைக் கொண்ட வரலாற்றுத் திரைப்படமாகும். வரலாற்றின் படி அலாவுதின் கில்ஜி, ராணி பத்மினியை தன் ஆசைக்கு இணங்க வைக்க கோட்டையை நோக்கி படையெடுத்தார். அப்போது கில்ஜியின் ஆசைக்கு இணங்க மறுத்த ராணி பத்மினி சில பெண்களுடன் தற்கொலை செய்துகொண்டார். இந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பன்சாலி ‘பத்மாவதி’ கதையை உருவாக்கி வருகிறார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து பன்சாலி தயாரிப்பு நிறுவனம், "மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ராணி பத்மாவதி கதாபாத்திரத்துக்கும், அலாவுதின் கில்ஜி கதாபாத்திரத்துக்கும் நடுவில் எந்த விதமான காதல் காட்சிகளோ, கற்பனைக் கனவு காட்சிகளோ படத்தில் இல்லை" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்தி திரையுலகினர் கடும் எதிர்ப்பு

பன்சாலி மீது தாக்குதல் நடத்தியதற்கு, இந்தி திரையுலக நட்சத்திரங்கள் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்கள். அவற்றின் தொகுப்பு

கரண் ஜோஹார்: படப்பிடிப்பின் போதும், பட வெளியீட்டின் போதும் பல முறை பிரச்சினைகளை சந்தித்திருக்கிறேன். சஞ்சயின் உண்ர்வு இப்போது எப்படியிருக்கும் என எனக்குப் புரிகிறது. நான் அவரோடு துணை நிற்கிறேன். அவருக்கு நேர்ந்தது அதிர்ச்சியளிக்கிறது. நமது துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக நிற்க இதுதான் நேரம்.

அனுராக் கஷ்யாப்: சினிமா துறையில் இருக்கும் அனைவரும் ஒருமுறை இணைந்து, நம் மேல் சவாரி செய்ய நினைப்பவர்களை எதிர்ப்போமா? அதே நேரத்தில், கர்ணி சேனா உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். ஒரு ராஜ்புத்தாக இருக்கும் என்னை குறுகவைத்துவிட்டீர்கள். முதுகெலும்பில்லாத கோழைகள். ட்விட்டரைத் தாண்டி நிஜ உலகத்தில் இந்து தீவிரவாதிகள் அடியெடுத்துள்ளனர். இந்து தீவிரவாதம் என்பது இனி மாயை அல்ல.

அசுதோஷ் கோவாரிகர் - அதிர்ச்சியாகவும் திகைப்பாகவும் கசப்பாகவும் இருக்கிறது. இன்னும் நாம் நினைத்ததை நம்மால் எடுக்க முடியவில்லை. சஞ்சய் வலிமையாக இருங்கள். நான் உங்களோடு இருக்கிறேன்

ஹ்ரித்திக் ரோஷன் -பன்சாலி, நான் உங்களுடன் நிற்கிறேன். இந்த வன்முறை ஆத்திரமூட்டுகிறது. ஒருவர் செய்வது பிடிக்கவில்லை என்பதால் யாரோ சிலர் சட்டென அவரது வேலையிடத்துக்கு வந்து கை ஓங்குகிறார்களா? கோபம் கொள்ளச் செய்கிறது.

அர்ஜுன் ராம்பால் - பத்மாவதி படப்பிடிப்பு தளத்தில் என்ன நடந்தது என்ற செய்தி கிடைத்தது. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் இது. சஞ்சய் லீலா பன்சாலி லீலா பன்சாலிக்கும், மொத்த குழுவினருக்கும் எனது முழு ஆதரவைத் தெரிவிக்கிறேன்.

ரிதேஷ் தேஷ்முக் - பத்மாவதி படப்பிடிப்பு தளத்தில் நடந்தது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். நான் அவருடன் துணை நிற்கிறேன். ராஜஸ்தான் காவல்துறை எது சரியோ அதை செய்ய வேண்டும்.

ப்ரீத்தி ஜிந்தா - மக்கள் இன்று எப்படி மாறிவிட்டார்கள் என்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. வன்முறையால் எதையும் புரியவைக்க முடியாது. நமது கருத்தை சொல்ல பல வழிகள் உள்ளன.

ப்ரியங்கா சோப்ரா: சஞ்சய் லீலா பன்சாலிக்கு நேர்ந்ததைக் கேள்விப்படும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. மிகவும் வருத்தமாக இருக்கிறது. நமது முன்னோர்கள் நமக்கு வன்முறையைக் கற்றுத்தரவில்லை.

ஆலியா பட் - பத்மாவதி படப்பிடிப்பு தளத்தில் நடந்தது அபத்தமானது. படைப்பாற்றல் சுதந்திரம், சினிமாவுக்கான சுதந்திரம் இருக்கின்றன. கலைஞர்களோ, வேறு எவரோ கூட குண்டர்களின் / அடியாட்களின் தயவில் இருக்கக்கூடாது.

சோனம் கபூர்: பத்மாவதி படப்பிடிப்பில் நடந்தது மோசமானது, கொடுமையானது. இதுதான் இன்றைய உலகின் நிலையா?

அனுஷ்கா சர்மா - சஞ்சய் லீலா பன்சாலி லீலா பன்சாலி படப்பிடிப்பில் நடந்ததைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். எப்படிப்பட்ட மாற்றுக் கருத்து இருந்தாலும் இந்த மாதிரியான நடத்தை அதை நியாயப்படுத்த முடியாது. வெட்ககரமான நிகழ்வு!

பரினீதி சோப்ரா - 20 வருடங்களாக அதே மனிதர் தான் தனது அற்புதமான படைப்புகளால் உங்களை மகிழ்வித்து வந்தார். ஏன் இந்த திடீர் அவநம்பிக்கை? அவர் தாக்கப்பட்டதைப் பார்க்கும்போது அருவருப்பாக இருக்கிறது. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். கருத்து சுதந்திரம் என்ற ஒன்று இருக்கும்போது, சில கோழைகள் அதை பறிப்பதை அனுமதிக்க மாட்டோம்

ஷ்ரேயா கோஷல் - அறுவருப்பு, அதிர்ச்சி. குண்டர்களா நாட்டை நடத்துகிறார்கள்? நடந்தது குறித்து வார்த்தையால் விவரிக்க முடியாத அளவு அதிர்ச்சியடைந்துள்ளேன். என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை. எங்கே ராஜஸ்தான் காவல்துறை? வெட்ககரம். இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஜனநாயக நாட்டில் வாழ்வதற்கான அர்த்தம் என்ன?

தாப்ஸி - அறநெறியை பாதுகாக்க கலைஞர்களை தாக்கும் அனைவருக்கும், தயவு செய்து நாட்டின் எல்லைக்கு சென்று உங்கள் ஆற்றாமையை தீர்த்துக் கொள்ளுங்க. அதிக பயனுள்ளதாக இருக்கும்.

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிபன்சாலி மீது தாக்குதல்பத்மாவதி படப்பிடிப்புஇந்தி திரையுலகினர் கடும் எதிர்ப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x