

'டியூப்லைட்' படம் தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், சினிமா விமர்சகர்களை கடுமையாக சாடியுள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான்கான்.
கபீர்கான் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'டியூப்லைட்'. ஜூன் 23-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் சல்மான்கான்.
அதில் பிரபல இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் "விமர்சனத்தை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்" என்ற கேள்விக்கு சல்மான்கான் "உண்மையாகச் சொல்லவேண்டுமென்றால் எனக்கு கவலையில்லை. யாருடைய கடின உழைப்பையும் குறைத்து மதிப்பிட அவர்களுக்கு உரிமையில்லை.
என் விஷயத்தில் ரசிகர்கள் அதை முடிவு செய்வார்கள். வசூல் அதை எப்படியும் நிரூபிக்கும். ஒரு படத்தை மோசமாக விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? படம் வெளியான முதல் நாளன்று ஏதோ குப்பையாக எழுதிவிட அது படத்தையும், அதன் பின்னால் இருக்கும் கடின உழைப்பையும் அழிக்கிறது. அவர்களுக்கும் இது தெரியும்.
எனது படங்கள் விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும். இப்போது சொல்கிறேன். எனது படத்துக்கு பூஜ்யம் வேண்டாம், மைனஸ் மதிப்பெண்கள் கொடுங்கள். என்ன நடக்கிறதென பார்ப்போம். எனது ரசிகர்கள் எப்படியும் என் படத்தைப் பார்ப்பார்கள். அதுதான் எனக்கு கிடைக்கும் வெகுமதி. அது அப்படிப்பட்ட விமர்சகர்களை முட்டாளாகவே காட்டும்" என்று தெரிவித்துள்ளார் சல்மான்கான்