உங்கள் முன் ஷாருக்கானாக நிற்க சலீம்கானே காரணம்: சல்மான் கான் தந்தையைப் பற்றி பாலிவுட் சூப்பர் ஸ்டார் நெகிழ்ச்சி

உங்கள் முன் ஷாருக்கானாக நிற்க சலீம்கானே காரணம்: சல்மான் கான் தந்தையைப் பற்றி பாலிவுட் சூப்பர் ஸ்டார் நெகிழ்ச்சி

Published on

பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் சல்மான், ''நான் இன்று உங்கள் முன்னால் நிற்பதற்கு காரணமானவர் சல்மான் கானின் தந்தை சலீம் கான்'' என்று நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார்.

சல்மான் கான் நடத்திவரும் டஸ் கா டம் 3 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி கிராண்ட் பைனலுக்கு வந்துவிட்டது. கடந்த ஜூன் 4ல் தொடங்கிய இந்த கேம் ஷோ ரசிகர்கள் மத்தியில் அதற்குள் முடிந்துவிட்டதே என்ற ஏக்கத்தை உருவாக்கிய நிகழ்ச்சி என்று கூறப்படுகிறது.

இதன் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், ''போராட்டம்மிக்க நடிகனாகத்தான் நான் முதன்முதலில் மும்பைக்கு வந்தேன்.

அப்போது சலீம் கான் உணவளித்து எனக்கு ஆதரவு அளித்து வந்தார். இப்போது சல்மான் அவர் தந்தையிடம் பெற்றுள்ள இடத்தை முதலில் பெற்றவன் நான். இன்று உங்கள் முன்னால் ஒரு ஷாருக்கானாக நிற்பதற்கும் சலீம் கான்ஜியே காரணம்.

இந்த நிகழ்ச்சிக்கு நான் வருவதற்கு ஒரே காரணம் சல்மான் கான். அவர் செல்லும் இடமெல்லாம் அவர் பின்னால் நானும் செல்வேன்.''

இவ்வாறு சலீம்கானைப் பற்றி ஷாருக்கான் நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார்.

இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியும் கலந்துகொண்டார். அவர்கள் இருவருமே சல்மானுடன் சேர்ந்து நடித்த "குச் குச் ஹோத்தா ஹாய்" திரைப்படத்தை நினைவு கூர்ந்தனர்.

கடந்த ஆண்டு 'ராயீஸ்' எனும் வெற்றிப்படத்தைத் தந்த ஷாருக் இந்த ஆண்டு டிசம்பரில், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'ஸீரோ' எனும் திரைப்படத்தை தரவிருக்கிறார். இப்படத்தில் ஷாருக்குடன் காத்தரீனா கைப் மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் நடித்து வருகின்றனர்.

டஸ் த டம் 3 கேம் ஷோவை அடுத்து, சல்மான் கான் 'பாரத்' திரைப்பட படப்பிடிப்பில் பிஸியாகவிருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in