அடுத்த படத்தில் நடிக்க என் மனம் அனுமதிக்கவில்லை: ஷாரூக் கான் விளக்கம்

அடுத்த படத்தில் நடிக்க என் மனம் அனுமதிக்கவில்லை: ஷாரூக் கான் விளக்கம்
Updated on
1 min read

இன்னும் தான் எந்தப் படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், அதற்கு தனது மனம் அனுமதிக்கவில்லை என்றும் நடிகர் ஷாரூக் கான் பேசியுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் ஷாரூக் கான். கடந்த சில வருடங்களாகவே இவர் நடிக்கும் படங்களுக்கு வரவேற்பு சிறப்பாக அமையவில்லை. வசூல் ரீதியில் ஓரளவு லாபகரமான படங்களாக இருந்தாலும், சல்மான் கான், ஆமிர் கான் படங்கள் அளவுக்கு ஷாரூக்கின் சமீபத்திய படங்கள் எதுவும் பெரிய வெற்றி பெறவில்லை.

முக்கியமாக உயரம் குறைந்த கதாபாத்திரத்தில் ஷாரூக் நடித்து வெளியான 'ஜீரோ' திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தது. படத்தின் தோல்வி ஷாரூக்கையும் பாதித்துள்ளது. டிசம்பர் மாதம் ஜீரோ வெளியானது. இன்று வரை ஷாரூக் கான் தனது அடுத்த படத்தை இறுதி செய்யவில்லை.

நடுவில் ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஷாரூக் நடிப்பார் என்று வந்த செய்திகள், வதந்திகள் மட்டுமே. முன்னதாக ஜூன் மாதம் தனது அடுத்த படத்தை இறுதி செய்வதாக சீனப் பயணத்தின் போது ஷாரூக் கூறியிருந்தார்.

தனது தற்போதைய நிலை குறித்து பேட்டி ஒன்றில் ஷாரூக் கான் பேசியுள்ளார்.

"இப்போது என்னிடம் எந்தப் படமும் இல்லை. எந்தப் படத்திலும் நான் வேலை செய்யவில்லை. வழக்கமாக நாம் நடித்துக்கொண்டிருக்கும் ஒரு படம் முடியும் தருவாயில் இருக்கும்போது அடுத்த படத்தை ஆரம்பிப்போம். 3-4 மாதங்களுக்குள் அந்த வேலைகள் தொடங்கும். இந்த முறை எதையும் செய்யத் தோன்றவில்லை. என் மனம் அனுமதிக்கவில்லை. சிறிது இடைவேளி எடுத்து, படங்கள் பார்த்து, கதைகள் கேட்டு இன்னும் நிறையப் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்றே தோன்றியது.

என் குழந்தைகளும் கல்லூரிப் படிப்புக்கு வந்துவிட்டனர். எனது மகள் கல்லூரிக்குச் செல்கிறார். எனது மகன் படிப்பை முடிக்கப் போகிறார். அதனால் எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன்" என்று ஷாரூக் கான் பதிலளித்துள்ளார்.

ஷாரூக்கும் அவரது மகன் ஆர்யனும் வெளியாகவுள்ள 'லயன் கிங்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in