

பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அவரது புகைப்படத்துக்குப் பதிலாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் புகைப்படம் வைக்கப்பட்டதால் பாலிவுட் திரையுலகம் சற்று அதிர்ச்சி அடைந்தது.
அமிதாப் பச்சனின் ட்விட்டர் பக்கம் திங்கட்கிழமை இரவு 11 .40 மணியளவில் ஹேக் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல் ட்வீட்டாக, ''இந்த உலகுக்கு இது முக்கியமான அழைப்பு. துருக்கி கால்பந்தாட்ட வீரர்களுக்கு எதிராக ஐஸ்லாந்து போலீஸார் நடந்துகொண்டதை நாங்கள் கண்டிக்கிறோம். இங்கு சைபர் க்ரைம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாங்கள் துருக்கி சைபர் கிரைம் குழுவைச் சேர்ந்தவர்கள்'' என்று பதிவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகைப்படங்களும் பதிவேற்றப்பட்டன.
தொடர்ந்து அமிதாப் பச்சனின் ட்விட்டர் பக்கத்திலிருந்து சம்பந்தம் இல்லாமல் ட்வீட்கள் வந்ததால் பாலிவுட் பிரபலங்கள் உட்பட பலரும் குழப்பமடைந்தனர். பின்னர் அரை மணிநேரம் கழித்து அமிதாப் பக்கம் மீட்கப்பட்டது.
இதுகுறித்து மும்பை போலீஸார் கூறும்போது, ''அமிதாப் பச்சனின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது குறித்த தகவல் சைபர் க்ரைம் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.