

சல்மான் கான் நடிப்பில் 'இன்ஷால்லா' திரைப்படத்துடன் வெளியாகவிருந்த அக்ஷய்குமாரின் 'சூர்யவன்ஷி' தற்ப்போது வேறொரு தேதியில் முன்னதாகவே வெளியாகிறது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சல்மான் கான், ஆலியா பட் நடித்திருக்கும் 'இன்ஷால்லா' திரைப்படம் அடுத்த வருடம் ரம்ஜான் அன்று வெளியாகவுள்ளது. இதே நாளில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிக்கும் 'சூர்யவன்ஷி' திரைப்படமும் வெளியாகவிருந்தது.
ஆனால் தற்போது 'சூர்யவன்ஷி', மார்ச் 27 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி படத்தின் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் சல்மான்கானுக்கும் நன்றிகள் தெரிவித்துள்ளார்.
சல்மான் கான் தன்னுடைய பக்கத்தில், "நான் எப்போதுமே இவரை (ரோஹித் ஷெட்டி) எனது இளைய சகோதரராகத்தான் நினைப்பேன். இன்று அவர் அதை நிரூபித்துவிட்டார். சூர்யவன்ஷி 27 மார்ச், 2020 அன்று வெளியாகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
'சிங்கம்', 'சிம்பா' படங்களைத் தொடர்ந்து, அதே கதைகளின் நீட்சியாக சூர்யவன்ஷி என்ற போலீஸ் கதாபாத்திரத்தை வைத்து படம் எடுத்து வருகிறார் ரோஹித். 'சிம்பா' படத்தின் முடிவிலும் சூர்யவன்ஷி கதாபாத்திரத்தைக் கொண்டு வந்திருப்பார். சூர்யவன்ஷியில் அக்ஷய்குமாருக்கு ஜோடியாக கேத்ரீனா கைஃப் நடிக்கிறார்.