

தான் நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் தெரிவித்துள்ளார்.
'தி லஞ்ச் பாக்ஸ்', 'லைஃப் ஆஃப் பை' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சர்வதேச அளவில் புகழை எட்டியவர் இர்ஃபான் கான். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தான் ஒரு அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அது உறுதியான பிறகு தானே அறிவிப்பேன் எனவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அப்பதிவில், “இந்நோயிலிருந்து மீள்வதில் நான் விட்டுக்கொடுக்காமல் போராடுவேன். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் உறுதுணையாக உள்ளனர். எனக்கு என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது என்பதை 10 நாட்களில் உறுதி செய்தபின் நானே அறிவிக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இர்ஃபான் கான் இன்று (வெள்ளிக்கிழமை) தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தான் நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அப்பதிவில், “எதிர்பாராத நிகழ்வுகள்தான் நம்மை வளரச் செய்கின்றன. அதைத்தான் நான் சமீபகாலமாக உணர்ந்து வருகிறேன். நான் நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், என்னை சுற்றியிருப்பவர்களின் அன்பாலும், பலத்தாலும், என்னுள் இருக்கும் பலத்தாலும் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இதிலிருந்து மீள்வதற்காக வெளிநாடு செல்லவிருக்கிறேன். எல்லோரும் தங்களுடைய அன்பைத் தொடர்ந்து அனுப்புங்கள்” என தெரிவித்துள்ளார்.
இர்ஃபான் கானின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்துள்ள அவரது ரசிகர்கள், விரைவில் அவர் குணமடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.