

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு, சென்னையில் நாளை இரங்கல் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில், திரையுலகினர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிறந்தவர் ஸ்ரீதேவி. சின்ன வயதிலேயே நடிக்கத் தொடங்கிய ஸ்ரீதேவி, தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் நடித்தார். ஒருகட்டத்தில் அங்கேயே செட்டிலான ஸ்ரீதேவி, போனிகபூரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி, அங்கு தங்கியிருந்த ஹோட்டலின் பாத் டப்பில் மூழ்கி மரணமடைந்தார். அவருடைய உடல் தனி விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டு எரியூட்டப்பட்டது.
ஸ்ரீதேவிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் குறிப்பிட்ட சில ஊர்களில் இரங்கல் கூட்டம் நடத்தி வருகிறார் போனி கபூர். அந்த வகையில், நாளை சென்னையில் இரங்கல் கூட்டம் நடைபெற இருக்கிறது. அடையாறு க்ரவுன் ப்ளாஸா ஹோட்டலில் நாளை மாலை 6 மணி முதல் 7.30 வரை கூட்டம் நடைபெறுகிறது. திரையுலகினர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூர் இருவரும் சென்னை வந்து இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.